(நா.தனுஜா)
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை வேறு எந்தவொரு கட்டமைப்பினாலும் மாற்றியமைக்கமுடியாது. நீதிமன்றங்களால் அளிக்கப்படும் தீர்ப்புக்களுக்கு ஜனாதிபதியும், பாராளுமன்றமும் மதிப்பளித்து செயற்படுவது சட்ட ஆட்சி மற்றும் நீதிமன்ற சுயாதீனத்துவம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு இன்றியமையாததாகும். அதற்கு மாறாக செயற்படுவது நீதிக்கட்டமைப்பின் மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை சீர்குலைவதற்கும், ஜனநாயகம் புறந்தள்ளப்படுவதற்குமே வழிவகுக்கும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன, தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றுவதற்கு இடைக்காலத்தடைவிதித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எவ்வித சட்டவலுவும் கிடையாது என்பதால் அதனை ஏற்கமுடியாது எனவும், அரசியலமைப்புப்பேரவையின் அதிகாரத்தை நீதிமன்றத்தினால் சவாலுக்கு உட்படுத்தமுடியாது எனவும் தெரிவித்தார். இதுகுறித்து தமது கண்டனத்தை வெளிப்படுத்தி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருக்கும் இடைக்காலத்தடையுத்தரவைப் புறக்கணித்து செயற்படுவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சகல முயற்சிகளையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இவ்வழக்கில் சட்டமா அதிபர் மற்றும் தேசபந்து தென்னக்கோன் சார்பில் ஆஜரான சட்டவாதி உள்ளிட்ட சகல தரப்பினரதும் வாதங்களை செவிமடுத்த மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம், அதன் பின்னரேயே இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் வரை தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதற்கு இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் அரசியலமைப்புப்பேரவையி;ன் ஒப்புதலுடன் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும் நியமனங்களைக் கேள்விக்கு உட்படுத்துகின்ற அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு இல்லை என வெளியிடப்பட்டிருக்கும் கருத்து முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாததாகும். அரசியலமைப்புப்பேரவையினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை உயர்நீதிமன்றத்தின் அடிப்படை உரிமைசார் நியாயாதிக்கத்தின்கீழ் திருத்தியமைக்கலாம். அதேபோன்று அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் போரையும், சமாதானத்தையும் பிரகடனப்படுத்துவதற்கான அதிகாரம் தவிர்ந்த ஜனாதிபதியின் ஏனைய சகல அதிகாரங்களும் உயர்நீதிமன்றத்தின் அடிப்படை உரிமைசார் நியாயாதிக்கத்துக்கு உட்படும்.
இதற்கு முன்னர் ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை, ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை உள்ளிட்ட சந்தர்ப்பங்களில் மேற்குறிப்பிட்டவாறு உயர்நீதிமன்றத்தின் அதிகாரங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை வேறு எந்தவொரு கட்டமைப்பினாலும் மாற்றியமைக்கமுடியாது. நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை மீறுவதற்கான அதிகாரம் பிரதமருக்கோ அல்லது சபாநாயகருக்கோ இல்லை. நீதிமன்றங்களால் அளிக்கப்படும் தீர்ப்புக்களுக்கு ஜனாதிபதியும், பாராளுமன்றமும் மதிப்பளித்து செயற்படுவது சட்ட ஆட்சி மற்றும் நீதிமன்ற சுயாதீனத்துவம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு இன்றியமையாததாகும். அதற்கு மாறாக செயற்படுவது நீதிக்கட்டமைப்பின் மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை சீர்குலைவதற்கும், ஜனநாயகம் புறந்தள்ளப்படுவதற்குமே வழிவகுக்கும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.