Our Feeds


Friday, July 12, 2024

Sri Lanka

அரசியலமைப்புச் சட்டத்தை கேலி செய்யும் காலம் இது!



அரசியலமைப்புச் சட்டத்தில் தேர்தல் எப்போது நடத்தப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை கேலி செய்யும் காலம் இன்று ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. மக்கள் இறையாண்மை கொண்ட அரசாங்கம், ஜனநாயகத்தின் மூன்று தூண்கள் நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, அதிகாரப் பகிர்வு அதனோடிணைந்த தடைகள் மற்றும் சமன்பாடுகள் என்ற கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

தற்போதுள்ள அரசாங்கமும் ஜனாதிபதியும் அரசியலமைப்பு சதித்திட்டத்தை மேற்கொள்வதாக நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கருதுகின்றனர். மக்கள் இறைமை, தேர்தல், ஜனநாயகம் எனப் பேசி, சதிகளை மேற்கொண்டு, மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதி தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியலமைப்பிற்கு முரணான வழிமுறைகளைப் பின்பற்றுவது வெட்கக்கேடான செயலாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் செய்தவை ஜனாதிபதி தேர்தலுக்கும் பயன்படுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும், தேர்தல் நடத்த நிதி இல்லை, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை ஜனாதிபதி அழைத்தல், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மூலம் வேட்புமனுப் பத்திரம் பெறுப்பேற்பதை நிறுத்துமாறு தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்துதல், ஜனநாயகத்தை மீறும் வகையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலருக்கு அழுத்தம் கொடுத்தல் போன்ற செயற்பாடுகள் நடந்தன. இவ்வாறான நிலையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் இது நடக்கலாம் என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேர்தல் ஒழுங்குமுறை தொடர்பான சட்டமூலத்தை கொண்டு வரல், இளைஞர்  பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற சட்டமூலத்தைக் கொண்டு வரல், தேர்தல் நடத்தினால் அரச ஊழியர்களுக்கு உரிய திகதியில் சம்பளம் வழங்க முடியாது என தெரிவித்தல், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை இராஜினாமா செய்யுமாறு கொலை மிரட்டல் விடுத்தல், இதனால் தேர்தல் ஆணைக்குழுவின் கோரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தல், தேர்தல் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கும் அரசாங்கம் இலஞ்சம் கொடுத்தல் என்பன முன்னர் நடந்தன. இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில், ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகளுக்கு இடையூறான செலவினக் கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய சுற்றறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட அரசாங்கம் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், தொழிலதிபர்கள், சிறு குழந்தைகள் என முழுக் குடும்பத்தையே அழித்துவிட்டது. 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நாட்டையே வங்குரோத்தடையச் செய்தது. 700 பில்லியன் அரச வருமானம் இழக்கப்பட்டன. அரச வருமானத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. 

fitch moody's standard & poor's ratings  தரவரிசைகளில் எமது நாட்டை கீழே இறக்கி நாட்டை அழித்தவர்கள், இன்று நாடு சிறந்த மட்டத்தில் இருப்பதாக அரசாங்கமே கூறி வருகிறது.

தற்போதைய இயல்புநிலையை தற்போதைய அரசாங்கமே உருவாக்கியுள்ளது. இந்த இயல்புநிலை ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் அரசாங்கத்திற்கு ஒரு திருப்திகரமான இயல்பு நிலையாக காணப்பட்டாலும், 220 இலட்சம் மக்களுக்கு அவர்களது வாழ்க்கையச் சுருக்கி வறுமையை அதிகரித்துள்ளனர். 220 இலட்சம் மக்களின் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளதோடு, அரசாங்க புள்ளிவிபரங்களின்படி, நாட்டில் இரண்டு முதல் மூன்று இலட்சம் வரையிலான நுண், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 

இவ்வாறான நிலையிலயே நாட்டை இயல்புநிலைக்கு கொண்டு வந்தோம் என்று அரசாங்கம் கூறுகிறது. வங்குரோத்தான நாட்டு மக்களின் பணத்தை திருடியவர்களுக்கும், மதுபான உரிமப் பத்திரங்களைப் பெற்றவர்களுக்கும், பணத்தின் மீது மோகம் கொண்டவர்களுக்கும் மட்டுமே இயல்பு நிலை உருவாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாறு நிதிகளைப் பெற்று, சலுகைகளைப் பெற்றவர்கள் எப்படியாவது அரசியலமைப்புச் சதிகளின் ஊடாக காலத்தை நீட்டிக்கப் பார்க்கிறார்கள். அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடுகளை விடுத்து, அஞ்சாமல் மக்கள் முன் வந்து, மக்களின் தீர்மானத்திற்கு தலைவணங்குமாறு தற்போதைய ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுக்கிறேன். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சீர்குலைக்க சதிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அரசியலமைப்பின் சட்டமன்றத்துக்குரிய ஷரத்துக்கள் மீறப்பட்டு, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக அரச நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு தன்னிச்சையாகச் செயற்படும் போது ஜனாதிபதித் தேர்தல் பிட்பொகட் அடிக்கப்படுமா என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது.

மக்களின் குரலுக்கு இடம் கொடுங்கள், மக்களின் கருத்துக்கு இடம் கொடுங்கள், மக்கள் சொல்வதைக் கேளுங்கள், மக்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் புரிந்து கொள்ளுங்கள். மக்கள் ஆணை வழங்கினால் ஆட்சியில் இருங்கள், ஆணை வழங்கவில்லை என்றால் ஆட்சியை விட்டுப்போக வேண்டும். இது ஜென்ட்ல்மென்ட் அரசியல் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் அரசியலமைப்பை மீறாமல், நாட்டின் உச்ச சட்டத்தை மீறாமல், அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானமொன்று கொண்டு வர வேண்டும் போல என எண்ணத்தோன்றுகிறது.

நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தேவையான வசதிகள் இல்லை. பொலிஸ் திணைக்களத்துக்குத் தேவையான மனித வளங்கள் மற்றும் பௌதீக வளங்கள் இல்லை. ஆனால் ஊவா மாகாணத்தில், பதுளை மாவட்டத்தில் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து, சமுதாய பொலிஸ் திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கி, வெல்லவாய பிரதேசத்திற்கு மக்களை அழைத்துச் சென்று, ஜனாதிபதி தலைமையில் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு இந்த அரசாங்கத்திடம் பணம் இருக்கிறது என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேர்தல் நடைமுறைகளை மீறக்கூடாது. மக்களின் ஜனநாயக உரிமைகளில் கை வைக்க வேண்டாம். தேர்தலுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அரசாங்கம்

நடந்து கொள்ள வேண்டும். மக்கள் தீர்மானத்திற்கு அடிபணியக் கற்றுக் கொள்ள வேண்டும். நாட்டில் ஜனநாயகத்திற்கு மட்டுமே இடம் உண்டு. தேர்தலை சீர்குலைக்க இந்த ஆட்சியாளர்கள் எடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் தோற்கடித்து, நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமையை மக்கள் பலத்துடன் வென்றெடுக்க ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »