Our Feeds


Thursday, July 11, 2024

Sri Lanka

கம்பனிகள் மாறவேண்டும் இல்லையேல் மாற்றுவோம் !



தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் பெருந்தோட்டக் கம்பனிகள் மாறாவிட்டால் நாங்கள் மாற்றுவோம் என்பதுடன், அந்த மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படாவிட்டால் அதில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம்’’ எனவும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை(10) நடைபெற்ற மதுவரி கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.


அதன்போது அவர் மேலும் கூறுகையில்,


மலையக மக்கள் பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு உழைப்புக்கேற்ற ஊதியமின்றி தவித்துக்கொண்டிருக்கின்றனர்.


இந்த மக்களின் சம்பள உயர்வு சட்டபூர்வமாக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டபோதும், அதனை எதிர்க்கும் சக்தி தனியார் துறையான தோட்டக் கம்பனிகளுக்கு இருப்பது ஆச்சரியப்படச் செய்கின்றது.



நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சுமந்துகொண்டிருக்கும் மலையக மக்களின் சம்பள உயர்வுக்கு எதிராக நீதிமன்றம் செல்கின்றார்கள் என்றால் தோட்டக் கம்பனிகள் நிருவாகங்கள் எவ்வாறான கேவலம் கெட்ட நிலையில் இருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது.


பெருந்தோட்டக் கம்பனி உரிமையாளர்களே நீங்கள் மாறுங்கள். இல்லாவிட்டால் நாங்கள் உங்களை மாற்றுவோம். இதேவேளை உடனடியாக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதரம் சம்பந்தமான விடயங்களை மாற்றுங்கள். இல்லாவிட்டால் நாங்கள் மாற்ற வைப்போம் என்பதை அரசாங்கத்துக்கும் கூறிக்கொள்கின்றோம்.


மலையக மக்களின் சின்னங்கள், வண்ணங்கள் எதுவாக இருந்தாலும் அவர்களின் எண்ணங்கள் ஒன்றாகவே இருக்கின்றன. இந்த சமூகத்துக்கு விடிவுகாலம் வர வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்ய வேண்டும்.


இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கப்பட வேண்டிய சம்பளம் இப்போது நான்கு வருடங்களாகியும் சம்பளம் மாறாமல் இருக்கின்றது. பெருந்தோட்டக் கம்பனிகள் தோட்டங்களை நடத்திச் செல்ல வேண்டுமாயின் சமரச பேச்சுக்களை நடத்தி, சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மே மாதம் முதலாம் திகதியில் நிலுவை சம்பளத்துடன் சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »