Our Feeds


Wednesday, July 24, 2024

Sri Lanka

வர்த்தமானி வாபஸ் பெறப்பட்டமை வருத்தமளிக்கிறது - வடிவேல் சுரேஸ் எம்.பி


பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் நாளாந்த சம்பளமாக வழங்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சு வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்பட்டுள்ளமை வருத்தமளிக்கிறது என இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்க பொது செயலாளரும் ,ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இது தொடர்பாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட தொழிற்சங்கவாதி என்ற அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷிடம் தொலைபேசியில் (24) வினவியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சு இரண்டு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தது. இருந்த போதிலும் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் சவாலுக்கு உட்படுத்தப்பட்டு பெருந்தோட்ட நிறுவனங்கள் நீதிமன்ற வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த நிலையில் தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த 1700 ரூபாய் நாட் சம்பளம் தொடர்பான வர்த்தமானி வழக்கின் இரண்டாம் விசாரணையை நடத்திய உயர் நீதிமன்றம் வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவை அண்மையில் பிறப்பித்திருந்தது.

அதேநேரத்தில் தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட்டிருந்த இந்த வர்த்தமானி அறிவித்தலில் சட்ட சிக்கல் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் நாள் சம்பளத்தை வழங்க வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி தொடர்பில் புதிய வேலை திட்டம் ஒன்றை கொண்டு வருவதற்காகவே தொழில் அமைச்சு இந்த வர்த்தமானிஅறிவித்தலை மீள் பெறப்பட்டுள்ளது என நான் அறிந்தேன்.

இருந்த போதிலும் 1700 ரூபாய் சம்பள விடயத்தில் யார் நெல் குத்தினாலும் பரவாயில்லை எம் மக்களுக்கு அரிசி கிடைத்தே ஆக வேண்டும். அதே நேரத்தில் 1700 என்ற அரிசி கிடைக்காவிட்டால் என்னுடைய சுயரூபத்தை காட்ட வேண்டி வரும் என வடிவேல் சுரேஷ் எம்.பி சுட்டிக்காட்டினார்.

மேலும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள விடயம் தொடர்பில் கையாளப்பட்ட வடிவங்கள் வேறாக இருக்கலாம்,அணுகுமுறையும் வித்தியாசமாக இருக்கலாம் எல்லா விதத்திலும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் என்ற வகையில் வடிவேல் சுரேஷ் ஆகிய நான் தோட்ட தொழிலாளர்களின் இந்த சம்பள விடயத்தில் குரல் கொடுத்து அதை செயல்படுத்த எல்லா ஆதரவும் வாங்கியுள்ளதுடன், சம்பள நிர்ணய சபைக்கும் ஆதரவு வாங்கியிருந்தேன்.

இந்த நிலையில் இந்த சம்பள விடயத்தில் மீண்டும் மீண்டும் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு தொடரட்டு இழுபறி நிலை ஏற்பட்டுள்ளமை தனக்கு கவலை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கான 1700 ரூபாய் சம்பளம் தொடர்பில் மீண்டும் ஒரு மீள் பரிசீலனை செய்வதற்காக இந்த வர்த்தமானி அறிவித்தலை தொழில் அமைச்சு வாபஸ் பெற்றுள்ளதாக அறிந்தேன். 

பரவாயில்லை வர்த்தமானி வாபஸ் பெற்றது, அதை திருத்துவது அதிகாரிகளின் பிரச்சனையாகும். ஆனால் எங்களுடைய பிரச்சினை எங்கள் மக்களுக்கு மே மாதம் முதலாம் தேதி அறிவிக்கப்பட்டது போல 1700 ரூபாய் சம்பளத்தை நிலுவையுடன் கூடிய சம்பளமாக வழங்க வேண்டும்.

இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் யார் நெல்லை குத்தினாலும் சரி எந்த விதத்தில் குத்தினாலும் சரி ஆனால் எனது மக்களுக்கு அரிசி கிடைக்காவிட்டால் பிரச்சனை எழும்பும் வடிவேல் சுரேஷ் தனது சுய ரூபத்தை காட்டுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »