Our Feeds


Wednesday, July 24, 2024

Sri Lanka

பொலிஸ் மா அதிபரின் இடைக்கால தடை தொடர்பில் அவசர தீர்மானம்!


பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் சட்ட அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அமைச்சரவையின் முடிவை அறிவிப்பதற்கு  ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை (24) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

இதன்படி, இந்த இடைக்கால உத்தரவின் போது சட்டத்திற்கு அமைய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொருத்தமான நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை அறிவித்துள்ளது.

உத்தரவுகளை அறிவித்த மூவரடங்கிய நீதியரசர் குழுவின் தலைவர் நீதியரசர் யசந்த கோதாகொட, இந்த மனு விசாரணையில் நீதிமன்றத்தின் முன் வலுவான வழக்கை நிறுவுவதில் மனுதாரர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, அதி வண. கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்டோர் சமர்ப்பித்த 9 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்று உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »