யுனெஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மூன்று பேர் அடங்கிய குழுவுடன் இன்று வந்த ஒட்ரே அசோலேவை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வருகை தந்திருக்கும் அவர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்.
இவ்வாறு வருகை தந்த ஒட்ரே அசோலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.
மேலும், யுனெஸ்கோ அமைப்பில் இலங்கை இணைந்து 75 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளதை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்விலும் அவர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.