Our Feeds


Saturday, July 6, 2024

Zameera

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி - இரண்டாம் நாள் அகழ்வுப் பணிகள்!


 முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், இரண்டாம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் நேற்று (05) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. 

இந்நிலையில் கொக்கிளாய் - முல்லைத்தீவு பிரதான வீதியின் முதற்படை அகழப்பட்டு ஆய்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், பேராசிரியர் ராஜ் சோமதேவ, காணாமல் போனோர் பணியக தலைவர் உள்ளிட்ட சட்டத்தரணிகள், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கொக்குத்தொடுவாய் கிராம அலுவலர், வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த இரண்டாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றன. 

அந்தவகையில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக கொக்கிளாய் - முல்லைத்தீவு பிரதான வீதியின் மேல்படை அகழப்பட்டு, அகழ்வாய்வுச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறு அகழப்பட்ட பகுதிக்கு பாதுகாப்பு கூரையும் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதற்கு முன்னர் இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன், இதுவரையில் 40 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், துப்பாக்கிச்சன்னங்கள், விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் பயன்படுத்தும் இலக்கத் தகடுகள், ஆடைகள் உள்ளிட்ட தடையப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன. 

இந் நிலையில் குறித்த மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வுப்பணிகள்  நேற்று முன்தினம் (04) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. 

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள அகழ்வாய்வுப்பணிகள் பத்து நாட்கள் மேற்கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »