தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்திய பயிற்சி
ஆரம்பிப்பதற்கு முன்பே வைத்தியரென தன்னை அடையாளப்படுத்தி 6 மற்றும் 8 வயதுடைய சட்டத்தரணி தம்பதியரின் இரண்டு பிள்ளைகளுக்கு வைத்திய சிகிச்சை வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மருத்துவ மாணவியை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல நேற்று (15) பிற்பகல் உத்தரவிட்டார்.கடந்த 3ஆம் திகதி கொலன்னாவை பிரதேசத்தில் உள்ள வைத்திய நிலையமொன்றுக்கு சென்ற சட்டத்தரணி ஹசைன் அஸார் சைதுன் மற்றும் சட்டத்தரணி பாத்திமா ஜுதைன் ஆகியோர் தமது இரண்டு பிள்ளைகளுக்கும் வைத்திய சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தனர்.
மேற்படி வைத்திய சிகிச்சையின் பின்னர் அவர்களின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, குறித்த வைத்தியருக்கு இதுபற்றி அறிவிக்கப்பட்டு, வைத்தியச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேற்படி மருத்துவச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ முத்திரையில் மற்றொரு வைத்தியரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் இது தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டின் படி, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான சந்தேக நபர் அல்லது மேற்படி தகவல் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாமை தொடர்பில் சட்டத்தரணி தம்பதியினரும் ஏனைய சட்டத்தரணிகள் குழுவொன்றும் மேலதிக நீதவானிடம் தெரிவித்திருந்தனர்.
இதன்படி, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை அழைத்த மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல, சந்தேகத்திற்குரிய மருத்துவ மாணவி செய்தது கொலை முயற்சிக்கு சமமான குற்றமென குறிப்பிட்டு அவரை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
உரிய அனுமதியின்றி வைத்திய தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான பெண் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.