Our Feeds


Thursday, July 4, 2024

Sri Lanka

9வது ஜனாதிபதியிடமும் ஏமாறுவதற்கு முன்னர் சம்பந்தன் காலமாகிவிட்டார்: அரியநேத்திரன் MP



இலங்கையின் 09வது ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காலமாகிவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.


வடகிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வு தரப்படவேண்டும் என்பதில் இலங்கையின் எட்டு ஜனாதிபதிகளுடன் பேசி நம்பி ஏமாந்த தலைவராகவே நாங்கள் சம்பந்தன் ஐயாவினை பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.


மறைந்த தமிழ் தேசிய பெருந்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் ஆத்ம சாந்தி வேண்டி இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை பகுதியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.


இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றுகையில்,


சம்பந்தன் ஐயாவின் அரசியல் வாழ்க்கை தொடர்பாகவும் அவரது செயற்பாடுகள் தொடர்பாகவும் உரையாடியதுடன் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என எட்டு ஜனாதிபதிகளிடமும் அதாவது யுத்த காலத்திற்கு முன்னர் இருந்த ஐந்து ஜனாதிபதிகளிடமும் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இருந்த மூன்று ஜனாதிபதிகளிடமும் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக பேசப்பட்டும் அதற்கான தீர்வினை எந்த ஜனாதிபதியும் பெற்றுக் கொடுக்காமல் சம்பந்தன் ஐயாவை ஏமாற்றி இருக்கின்றார்கள் என கருத்து தெரிவித்தனர்.


அத்தோடு சம்பந்தன் ஐயா அரசியலுக்கு வர முன் ஒரு சட்டத்தரணியாக பணியாற்றியதுடன் அந்த காலப்பகுதியில் பல்வேறு வழக்குகளில் அவர் ஆஜராகி இருந்தார்.


அந்த நிலையில் அரசியலுக்கு வருகின்ற போது அவற்றினை முடித்து விட்டே வருவேன் எனக் கூறி அவ்வாறு வந்து தமிழ் மக்களின் உரிமைக்காகவே தனது தொடர் போராட்டத்தினை அகிம்சை வழியில் முன்னெடுத்தார் எனவும் தெரிவித்துள்ளனர்.


இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் மற்றும் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டார கிளை தலைவர் செயலாளர், பொருளாளர், இளைஞர் அணி மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


இந்நிகழ்வின் போது அஞ்சலி செலுத்தும் முகமாக தீபச்சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.


கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் சம்பந்தன் ஐயாவின் ஆசைப்படியே இறுதி வரை நமது உரிமைகளுக்காக போராட வேண்டும் என கருத்துக்களை முன்வைத்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »