Our Feeds


Thursday, July 4, 2024

Sri Lanka

67வது மாடியிலிருந்து விழுந்து மரணித்த மாணவனும், மாணவியும் - வெளியாகும் பல திடுக்கிடும் தகவல்கள்



கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள உயரமான ஆடம்பரத் தொடர்மாடியில் இருந்து விழுந்து இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த சம்பவம் குறித்து பலவேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.


கொழும்பு - 07 சினமன் கார்டின் எனப்படும் குருந்துவத்தையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனும் மாணவியும் கொம்பனி வீதியில் உள்ள Altair அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் (2) இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது, குறித்த கட்டிடத்திற்கு முன்னால் உள்ள வீதியின் மறுபுறத்தில் இருந்து உயிரிழந்தவர்கள் இருவரும் எப்படி வந்தனர் என்பதும் பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.

இதன்படி அவர்கள் இருவரும் பிற்பகல் 2.30க்கு குடியிருப்பு கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளனர்.

பாடசாலை சீருடையில் இருந்த மாணவியின் தோளில் ஒரு பை தொங்குவதும், மாணவனின் தோளில் இரண்டு பைகள் தொங்குவதும் பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த பாடசாலையில் 10ம் வகுப்பில் கல்வி கற்கும் இந்த இரு மாணவர்களின் பெற்றோரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த மாணவன் வெள்ளவத்தை பகுதியில் வசிப்பவர் எனவும், மாணவி களனி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விசாரணையில், குறித்த இருவரும் கட்டிடத்திற்குள் நுழைந்து, லிஃப்ட் மூலம் ஐந்தாவது மாடியில் உள்ள உடற்கட்டமைப்பு மையத்திற்கு வழக்கமான பார்வையாளர்களாகச் சென்றதை பொலிஸார் கண்டறிந்தனர்.

ஐந்தாவது மாடிக்குச் சென்று சீருடைகளை மாற்றிக்கொண்டு கறுப்பு உடை அணிந்த இருவரும் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்ப்பகுதிக்கு மீளவும் திரும்பியுள்ளனர்.

பின்னர் மாணவன் மட்டும் வெளியே வந்து வீட்டுத் தொகுதிக்கு முன்பாக உள்ள வீதியின் மறுபுறம் நடந்து சென்று மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் எதையோ எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டுத் தொகுதிக்குள் நுழைந்தார்.

இதனையடுத்து இருவரும் லிஃப்டில் 67வது மாடிக்கு சென்றுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் இருந்து சிகரெட்டுகளை மாணவன் எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

67வது மாடியில் இருந்து இருவரும் கீழே விழுந்துள்ளமை தெரியவந்துள்ளது. அவர்களின் உடல் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் உள்ள ஏர் கண்டிஷன் யூனிட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்பு வளாகம் 70 மாடிகளைக் கொண்டது என்பதுடன் குறித்த இருவருக்கும் அந்த இடத்தைப் பற்றி நல்ல புரிதல் இருந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவனும் மாணவியும் விழுந்த 67 ஆவது மாடியில் அவர்களது காலணிகள், பணப்பைகள் மற்றும் கைத் தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு மாணவர்களும் தற்கொலை செய்யும் நோக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்திருந்தால், ஆடைகளை மாற்றாமல் நேரடியாக மேல் தளத்திற்குச் சென்று தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், இந்த மாணவன் மற்றும் மாணவியின் நடத்தையை பாதுகாப்பு கெமராக்கள் மூலம் அவதானிக்கும் போது தற்கொலை செய்து கொள்ளும் மனநிலை அவர்களது உடல் மொழியில் தென்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்களின் முகபாவனைகள் மற்றும் அசைவுகளைக் காட்டும் சிசிடிவி காட்சிகளின்படி, இது தற்கொலையா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை" என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா கூறியுள்ளார்.

அவர்கள் கீழே விழுந்ததற்கும், குதித்ததற்கும் நேரில் கண்ட சாட்சிகள் இல்லை என்பதுடன் கட்டிடத்திற்குள் நுழைந்த பல மணிநேரங்களுக்குப் பின்னர் அவர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பிரேத பரிசோதனை நேற்று (03) கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்றதுடன், இரு மாணவர்களினதும் பெற்றோரிடம் வாக்குமூலங்களையும் பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »