Our Feeds


Monday, July 22, 2024

Sri Lanka

4வது முறையாக LPL சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா கிங்ஸ்



லங்கா பிரீமியர் லீக் (LPL T20) 2024ஆம் ஆண்டு தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி கோல் மார்வல்ஸ் அணியினை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ளது.


மேலும் இந்த வெற்றியோடு ஜப்னா கிங்ஸ் LPL T20 தொடரில் நான்காவது முறையாக சம்பியன் பட்டம் வென்று தொடரினை நிறைவு செய்து கொள்கின்றது.


LPL T20 தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச அரங்கில் நடைபெற்றிருந்தது. முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஜப்னா கிங்ஸ் அணி வீரர்கள் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தனர்.


அதன்படி முதலில் துடுப்பாடிய கோல் மார்வல்ஸ் தடுமாற்றம் காண்பித்த நிலையில் ஒரு கட்டத்தில் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் அவ்வணிக்கு டிம் செய்பார்ட் மற்றும் பானுக்க ராஜபக்ஷ ஆகியோர் கைகொடுக்க கோல் மார்வல்ஸ் அணியானது 184 ஓட்டங்களை 6 விக்கெட்டுக்களை இழந்து பெற்றது.


கோல் மார்வல்ஸ் துடுப்பாட்டத்தில் வெறும் 34 பந்துகளை எதிர்கொண்ட பானுக்க ராஜபக்ஷ 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 82 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் டிம் செய்பார்ட் 37 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகளோடு 47 ஓட்டங்கள் எடுத்தார்.


பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 185 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய ஜப்னா கிங்ஸ் தொடக்கத்தில் சிறு தடுமாற்றம் ஒன்றினை காண்பித்தத போதிலும் ரைலி ரூசோ மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரது அபார ஆட்டத்தினால் போட்டியின் வெற்றி இலக்கினை 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 185 ஓட்டங்களுடன் அடைந்தது.


ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் ரைலி ரூசோ, குசல் மெண்டிஸ் ஜோடி 185 ஓட்டங்கள் என்கிற அபார இணைப்பாட்டத்தினை பதிவு செய்ததோடு அதில் சதம் கடந்த ரைலி ரூசோ ஆட்டமிழக்காது 53 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 106 ஓட்டங்கள் எடுத்தார்.


மறுமுனையில் குசல் மெண்டிஸ் 40 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகளோடு 72 ஓட்டங்களைப் பெற்றார். கோல் மார்வல்ஸ் அணி கைப்பற்றிய ஒரேயொரு விக்கெட்டினை ட்வெய்ன் ப்ரேடொரியஸ் தனது பெயரில் பதிவு செய்த போதிலும் அதில் பிரயோசனம் இருக்கவில்லை.


போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர்நாயகனாகவும் ஜப்னா கிங்ஸ் அணியின் ரைலி ரூசோ தெரிவு செய்யப்பட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »