மலையக பெருந்தோட்டங்களில் 3,000 கர்ப்பிணி தாய்மார்களுக்கு
20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போஷாக்கு உணவு பொருட்கள் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு ஊடாக விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.தோட்ட வைத்திய அதிகாரிகள்(EMO), தோட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள்(EWO) மற்றும் சிறுவர் பாராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்கள்(CCO) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று சனிக்கிழமை (06) கொட்டகலை சி.எல்.எப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், இ.தொ.கா தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல் பிரதி தலைவர் கணபதி கணகராஜ், அமைச்சரின் ஒருங்கினைப்பு செயலாளர் அர்ஜூன், ஹட்டன் பிராந்திய மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் ரனசிங்க உள்ளிட்ட நுவரெலியா மாவட்ட தோட்டப் பகுதி மக்களின் சுகாதார நடவடிக்கையில் ஈடுப்படும் 600 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்துக்கொண்டிருந்தனர்.
இதன்போது சுகாதார மேம்பாட்டு உத்தியோகஸ்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், முகம் கொடுக்கும் சவால்கள் உள்ளிட்ட எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதனை கேட்டறிந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில்,
தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளும் செயற்பாடு போன்று தோட்ட உத்தியோகஸ்தர்களின் சம்பள அதிககரிப்பிற்கும் தான் உறுதுனையாக இருப்பேன் என்று தெரிவித்தார்.
மேலும் தற்போது தோட்டங்களில் உத்தியோகத்தர்களாக கடைமையாற்றுபவர்களுக்கும் அமைச்சின் ஊடாக வீடமைப்பு திட்டத்தினையும், காணியினை பெற்றுத்தருவதாகவும், தோட்ட தொழிலாளர்களுக்கு போன்றே உங்களுக்கும் காப்புறுதி திட்டத்திதையும் விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் விளக்கமளித்தார்.
அத்துடன் சுமார் 1,500 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள 26,000 சிறுவர்களுக்கும் ஊட்டச்சத்துள்ள காலை உணவு வழங்குவதற்காக புதிய வேலைத்திட்டமும் விரைவில் நடைமுறைக்கு வரும் என்பதனையும் அமைச்சர் தெரிவித்தார். .
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் தோட்டப்புற மாணவர்கள் கல்வி கற்றப்பின்னர் அரச வேலைகளை தவிர்த்து தனியார் துறை மற்றும் சுயத்தொழில்களிலும் ஈடடுபட ஆயத்தமாக இருக்குமாறு தாங்களும் பிள்ளைகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் இதன்போது கேட்டுக்கொண்டார்.
அத்துடன் மலையக பெருந்தோட்டங்களில் 3000 கர்ப்பிணி தாய்மார்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போஷாக்கு உணவு பொருட்கள் அமைச்சி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதை பெருந்தோட்ட மனிதவள நிதியம் ஊடாக விரைவில் வழங்க உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
-ஆ.ரமேஸ்-