மூன்று மாவட்டங்களிலுள்ள நெல் சந்தைப்படுத்தும் சபைக்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகள் மூலம் 2023 மற்றும் 2024 பெரும் போகத்தில் 26,37,826 கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (12) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் டி. வீரசிங்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடளாவிய ரீதியில் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு 353 களஞ்சியசாலைகள் காணப்படுகின்றன.
அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் 24 களஞ்சியசாலைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 களஞ்சியசாலைகளும் அம்பாறை மாவட்டத்தில் 67 களஞ்சிய சாலைகளும் அமைந்துள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் 8 களஞ்சிய சாலைகளும் வவுனியாவில் 7 களஞ்சிய சாலைகளும் முல்லைத்தீவில் 14 களஞ்சிய சாலைகளும் மன்னாரில் 4 களஞ்சிய சாலைகளும் யாழ்ப்பாணத்தில் ஒரு களஞ்சிய சாலையும் காணப்படுகின்றன.
அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்தில் 69 களஞ்சிய சாலைகளும் பொலனறுவை மாவட்டத்தில் 56 களஞ்சிய சாலைகளும் மாத்தளை மாவட்டத்தில் ஒரு களஞ்சிய சாலையும் கண்டி மாவட்டத்தில் 10 களஞ்சிய சாலைகளும் உள்ளன.
குருணாகல் மாவட்டத்தில் 19 களஞ்சிய சாலைகளும் புத்தளம் மாவட்டத்தில் 4 களஞ்சிய சாலைகளும் கம்பஹா மாவட்டத்தில் 2 களஞ்சிய சாலைகளும் பதுளை மாவட்டத்தில் 7 களஞ்சிய சாலைகளும் மொனராகலை மாவட்டத்தில் 9 களஞ்சிய சாலைகளும் காணப்படுகின்றன.
இரத்தினபுரி மாவட்டத்தில் 8 களஞ்சிய சாலைகளும் மாத்தறை மாவட்டத்தில் 2 களஞ்சியசாலைகளும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 19 களஞ்சிய சாலைகளும் இவ்வாறு செயற்பட்டு வருகின்றன.
2023, 2024 பெரும் போகத்தில் 26,37,826 கிலோ நெல் அம்பாறை, இரத்தினபுரி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் அரச துறையினால் உபயோகிக்கப்படாத களஞ்சிய சாலைகள் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.