Our Feeds


Saturday, July 6, 2024

SHAHNI RAMEES

200 பாடசாலைகளுக்கு 2,000 டெப் கணனிகள்..!

 

புதிய பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட கல்வி முறையும் அவசியமானது எனவும், அதற்கான கல்விச் சீர்திருத்தங்கள் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

காலி – ஹால் டி கோல் ஹோட்டலில் இன்று (06) நடைபெற்ற கல்வி நவீனமயமாக்கலின் புதிய அத்தியாயமாக தென் மாகாணத்தின் 200 பாடசாலைகளுக்கு 2,000 நவீன வகுப்பறைகள் மற்றும் 2,000 டெப் கணனிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்திர் ரமேஷ் பத்திரன இந்திய அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய தென் மாகாண சபைக்கு கிடைத்த 3,000 இலட்சம் ரூபாய் (30 கோடி) நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அன்று நாம் பல கல்விக் கொள்கைகளை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினோம். அந்தக் கல்விக் கொள்கைகள் அன்றைய காலத்திற்கு ஏற்றதாக இருந்தாலும், இன்று ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால், கல்வித் துறையில் புதிய சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது பாடசாலைகளில், செயற்கை நுண்ணறிவுக் கழகங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கல்வியை தொடங்கி சில வருடங்கள் ஆகிறது.

இந்த ஆண்டு நாம் ஆரம்பித்திருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சி தேவைப்படும். அதற்குத் தேவையான பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிளை அரசாங்கம் ஏற்படுத்தும். மத்திய கல்லூரிகள் மற்றும் தேசிய பாடசாலைகள் செயற்கை நுண்ணறிவு பாடசாலைகளாக மேம்படுத்தப்பட வேண்டும்.

நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறுவதில் அண்டை நாடான இந்தியாவிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கைக்கு ஐ.ஐ.டி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் நான் எலான் மஸ்குடன் கலந்துரையாடினேன். அவரது நிறுவனத்தின் இணையத் தொழில்நுட்பம் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.

இதன் மூலம் தொலைதூர கிராமங்களில் உள்ள பிள்ளைகளுக்கு தொழில்நுட்பக் கல்வி வழங்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்று தென் மாகாணம் கல்வித்துறையில் அதீத திறமைகளை வெளிப்படுத்தும் மாகாணமாக மாறியுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்காலத்திற்கு ஏற்ற சந்ததியை உருவாக்கி ஒரு நாடாக உலகையே வெல்லும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »