Our Feeds


Saturday, July 27, 2024

Sri Lanka

இலங்கை - இந்திய அணிகள் மோதும் ரி20 சர்வதேச தொடர் இன்று ஆரம்பம்!


சூர்யகுமார் தலைமையிலான இந்திய மற்றும் சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 சர்வதேச தொடர் இன்று பல்லேகலையில் ஆரம்பமாகிறது.


இலங்கைக்கு இருதரப்பு கிரிக்கெட் சுற்றுத்தொடர் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் வீதம் கொண்ட ரி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளனர். இந்நிலையில் முதல் தொடரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் இன்று ஆரம்பமாகிறது. இரண்டாவது போட்டி ஞாயிற்றுக்கிழமையும், மூன்றாவது போட்டி செவ்வாய்க்கிழமையும் நடைபெறுகிறது.


இலங்கை அணி ரி20 உலகக்கிண்ண தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறிய நிலையில் தற்போது புதிய தலைமையான அசலங்க மற்றும் புதிய உள்ளக பயிற்றுவிப்பாளர் சனத் ஜெயசூரிய ஆகியோருடன் களமிறங்குகிறது. அதேபோன்று ரி20 உலக சம்பியனான இந்திய அணியும் தற்போது புதிய தலைமை சூர்யகுமார் யாதவ், புதிய பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர் ஆகியோருடன் களமிறங்குகிறது.


 கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையில் இலங்கை – இந்திய அணிகளுக்கிடையில் 29 ரி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இந்திய அணி 19 போட்டிகளிலும், இலங்கை அணி வெறும் 9 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளன. இரு அணிகளும் இறுதியாக கடந்த 2023 ஜனவரியில் மோதியிருந்தன. அதன் பின் ஒன்றரை ஆண்டுகளின் பின் இரு அணிகளும் ரி20யில் சந்திக்கின்றன.


இரு அணிகளுக்கும் இடையில் இறுதியாக நடைபெற்ற 5 போட்டிகள் தொடர்பில் அவதானம் செலுத்துகின்ற போது இந்திய அணி 3 போட்டிகளிலும், இலங்கை அணி 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றிருக்கின்றன.


இலங்கை - இந்திய அணிகளுக்கிடையில் இதுவரையில் 10 இருதரப்பு ரி20 சர்வதேச தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் இந்தியா 8 தொடர்களை வென்று அசைக்க முடியாத ஆதிக்கம் செலுத்துகிறது. இலங்கை அணி கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியாக தொடரை இந்தியாவுடன் 2-1 என வென்றிருந்தது. இலங்கை அணி இறுதியாக கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் ஆடி 1-2 என தொடரை பறிகொடுத்திருந்தது.


இலங்கை ரி20 அணி தற்போது புதிய தலைமையுடன் களமிறங்குகிறது. ரி20 உலகக்கிண்ணத்தில் முதல் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து தலைவராக செயற்பட்ட வனிந்து ஹஸரங்க மீது அழுத்தங்கள் ஏற்பட்டதன் காரணமாக அவர் தலைமை பதவியிலிருந்து விலகி தான் வீரராக அணியில் தொடர்ந்து என்னால் முடிந்த அளவுக்கு வீரராக பிரகாசிப்பேன் என தெரிவித்திருந்தார்.


இலங்கை குழாமில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர்களான துஸ்மந்த சமீர (உடல் சுகயீனமின்மை) மற்றும் நுவான் துஷார (பயிற்சியின் போது விரல் உபாதை) ஆகியோர் இலங்கை குழாமிலிருந்து அடுத்தடுத்து வெளியேற, வேகப்பந்துவீச்சாளர்களான அசித்த பெர்ணான்டோ மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ளனர்.


இந்திய அணி ரி20 உலக சம்பியனாக வலம்வருவதுடன், இலங்கை அணியுடன் அண்மைக்காலங்களில் பல சாதனை வெற்றிகளையும் குவித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோஹ்லி, ரோஹிட் சர்மா, ரவீந்திர ஜடேஜா போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் பல இளம் வீரர்களுடன் இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் கடந்த வாரம் நிறைவுக்குவந்த எல்.பி.எல் தொடரில் பிரகாசித்த வீரர்களை கொண்டு இலங்கை அணி இந்தியாi எதிர்கொள்கிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »