இஸ்ரேல் - பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் மேலும் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தாக்குதல்களுக்கு இலக்காகி பலியாகின்றனர். அத்துடன் பலர் உடல் உறுப்புக்களை இழந்து தவிக்கின்றனர்.
இப் போரின் தீவிரத்தைக் கண்ட உலக நாடுகள் இதனை நிறுத்தக்கோரி பல வழிகளில் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இரு நாடுகளும் அதனை ஏற்பதாக இல்லை.
ஹமாஸ் அமைப்பினரை முற்றாக அழிக்கும் வரையில் ஓயப் போவதில்லை என்ற குறிக்கோளுடன் இஸ்ரேல் காசாவை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகள், தஞ்சமடைந்திருக்கும் பகுதிகள் என ஒரு இடத்தையும் விடாது தாக்குதல் நடத்துகிறது இஸ்ரேல்.
இவ்வாறிருக்க கடந்த 2 நாட்களில் அப்பாவி பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 289 பேர் உயிரிழந்துள்ளதோடு 400 பேர் படு காயமடைந்துள்ளனர்.
நாளுக்கு நாள் காசா பகுதியில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதுவரையில் காசா பகுதியில் பலியானவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 584ஆக உயர்ந்துள்ளதோடு, 88,800 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.