மாதுரு ஓயா தேசிய பூங்காவில், ஐந்து வருடங்களுக்கு
முன்னர், மஹியங்கனை தம்பான பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பூர்வீக குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர் ஒருவர் உள்ளிட்டோர் மயில் ஒன்றை கொன்று சமைத்து உண்ட சம்பவம் தொடர்பில், மாதுரு ஓயா தேசிய வனப்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்த வெளிநாட்டவர் உட்பட ஆறு பேரை கைது செய்வதற்கு மஹியங்கனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மாதுரு ஓயா தேசிய பூங்காவின் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, மயிலை வேட்டையாடி சமைத்து உண்ட காணொளியை அடிப்படையாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைப் பொருத்தமட்டில் மயிலை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில், 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மாதுரு ஓயா வனப்பகுதிக்குள் பிரவேசித்து வெளிநாட்டைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர், வில் மற்றும் அம்புகளைப் பயன்படுத்தி மயில் ஒன்றைக் கொன்று சமைத்து சாப்பிடுவதை காணொளியாக பதிவுசெய்துள்ளார்.
பெஸ்ட் எவர் புட் ரிவ்யூ சோவ் எனும் யூடியூப் சேனலில் சமூக ஊடக செயற்பாட்டாளரான குறித்த வெளிநாட்டவர் 'மயிலை வேட்டையாடும் இலங்கை பழங்குடியினர் - வேடுவர்களுடன் ஒருநாள்' எனும் தலைப்பில் பதிவிட்ட இந்த காணொளி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு படமாக்கப்பட்டதாக கருதப்படும் இந்த காணொளி ஒரு வருடத்திற்கு முன்பு குறித்த யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு சட்டம், குற்றவியல் சட்டத்தை மீறும் செயல் என மாதுரு ஓயா தேசிய பூங்காவின் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.
இந்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளரான வெளிநாட்டவர் மற்றும் தம்பனை - கொடிப்பாக்கினிய பிரதேசத்தில் வசிக்கும் பழங்குடியினர் ஐவரையும் உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.