முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த இளைஞன் ஒருவனை கடத்திச் சென்று தவறான முறையில் தடுத்து வைத்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த தீர்ப்பை அறிவித்தார்.
இதன்படி, குற்றம் சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர 18 குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 20,000 ரூபா அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 06 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, பிரதிவாதி( ஹிருணிகா), இளைஞன் ஒருவரை கடத்திச் செல்வதுற்கு சதி செய்தமை மற்றும் அதற்கு உதவிய குற்றத்திற்காக குற்றவாளியாக அறிவிக்கப்படுவதாக நீதிபதி அமல் ரணராஜா திறந்த நீதிமன்றில் அறிவித்தார்.
ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதியின் (ஹிருணிகா) ஆதரவாளர்கள் 8 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்ததை தண்டனைக்கு முன்னர் வாதி சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நினைவு கூர்ந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப, அவருக்கு 69 ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை விதிக்கும் திறன் நீதிமன்றத்துக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதிவாதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்துக்கொண்டு, விற்பனை நிலையம் ஒன்றில் பணிபுரிந்த சாதாரண குடிமகனைக் கடத்திச் சென்று குடும்பத் தகராறுகளை தீர்க்க நடவடிக்கை எடுத்தமை, சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாத விடயம் என சுட்டிக்காட்டிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல், பொதுமக்களின் நம்பிக்கையுடன் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் இவ்வாறு செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
இது மிகவும் பாரதூரமான விடயம் எனவும், இந்த பிரதிவாதி சிறையில் அடைக்கப்பட வேண்டிய குற்றம் இது எனவும், தண்டனையை ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக மாற்றுவது பொருத்தமற்றது எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.
மேலும், இந்த பிரதிவாதியின் போக்கில் யாராவது பயணிக்கத் தயாராக இருந்தால், சட்டரீதியாக வாழ்பவர்களுக்கு சட்டத்தின் பாதுகாப்பு கிடைக்கும் என்பதை சுட்டிக்காட்டும் வகையிலான தண்டனை இந்த பிரதிவாதிக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் மேலும் கோரினார்.
பிரதிவாதி ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட, நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், பிரதிவாதிக்கு மூன்று, நான்கு மற்றும் ஐந்து வயதுடைய மூன்று சிறு பிள்ளைகள் இருப்பதாகவும், அவர் சிறையில் அடைக்கப்பட்டால், அந்த பிள்ளைகளுக்கு பாரபட்சம் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.
எனவே, பிரதிவாதியை சிறையில் அடைக்காமல், அவருக்கு தளர்த்தப்பட்ட தண்டனை ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றில் கோரினார்.
அனைத்து சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதிபதி, பின்னர் இந்த தீர்ப்பை அறிவித்தார்.
இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி மத்தேகொட நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அதன்படி இன்று மதியம் 12.30 மணியளவில் தண்டனை விதிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி, தெமட்டகொட பிரதேசத்தில் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றிய அமில பிரியங்க என்ற இளைஞனை கறுப்பு டிஃபென்டர் வாகனத்தில் கடத்திச் சென்று சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.