Our Feeds


Friday, June 14, 2024

Anonymous

ஜனாதிபதி தேர்தலை உரிய நேரத்தில் நடத்தியே தீரவேண்டும் - நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அதிரடி!

 



19ஆவது திருத்தச்சட்டத்தில் காணப்படும் சில சட்ட சிக்கல்கள் காரணமாக ஜனாதிபதித் தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க முடியும் என பரவலான கருத்துகள் இலங்கையின் அரசியல் களத்தில் பேசுபொருளாக உள்ளது.


ஆறு வருடங்களாக காணப்பட்ட ஜனாதிபதியின் பதவிக் காலம் 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் 5 வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்டது. ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் என அரசியலமைப்பின் 32 ஆவது பிரிவில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


5ஆண்டுகளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


அரசியலமைப்பின், 83 (பி) பிரிவின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை குறிப்பிடும் 32ஆவது சரத்தை மாற்றவும், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 6 ஆண்டுகளுக்கு மேல் அதிகரிக்கவும் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பொன்றும் நடத்தப்படுவது அவசியமாகும்.


1978 அரசியலமைப்பின் பிரிவு 30 (2) இன் பிரகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஆறு வருட காலத்திற்கு பதவியில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 19ஆவது திருத்தத்தில் இது 5ஆண்டுகளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


19ஆவது திருத்தத்தில், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து வருடங்களாகக் குறைக்கும் வகையில் 30(2)வது சரத்து திருத்தப்பட்டது.


ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பின் அங்கீகாரம் தேவைப்பட்ட போதிலும், 19 ஆவது திருத்தத்தின் போது, ​​ஒரு வருடத்திற்கு பதவிக் காலத்தைக் குறைக்க பொதுவாக்கெடுப்பு தேவை என்று உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கவில்லை என்பதால் இது அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் இந்த முரண்பாடுகள் குறித்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.


விஜேதாச ராஜபக்ச கூறுவதாவது,


”19ஆவது மற்றும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் ஊடாக ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியலமைப்புக்கு புதிய வியாக்கியானங்களை வழங்க எவருக்கும் அதிகாரம் கிடையாது.


ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதனை சர்வஜன வாக்கெடுப்பில் விட வேண்டும்.


சர்வஜன வாக்கெடுப்பிலும் வெற்றிபெற வேண்டும். அதுவரை பதவிக்காலத்தை அதிகரிக்க ஜனாதிபதி காத்திருக்க வேண்டும். அதனால் செயற்கை நுண்ணறிவான அர்த்தங்களை அரசியலமைப்புக்கு எவராலும் வழங்க முடியாது.


ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்


ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பது இலகுவான விடயம் இல்லை என்பதுடன், அது நடைமுறைக்கு சாத்தியமான விடயமும் அல்ல. அது நீண்ட செயல்முறையாகும்.


ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தீர்மானத்தை அரசாங்கத்தால் எடுக்க முடியாது. அந்த அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளது. ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் கட்டாயம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.


ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு மாதகாலத்துக்கு முன்பே வேட்புமனுக்கான அறிவித்தல்கள் விடுக்கப்பட வேண்டும். அதன் பிரகாரம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் நவம்பர் 17ஆம் திகதி முடிவடைய உள்ளது.


செப்டெம்பர் 17ம் திகதிக்கும் ஒக்டோபர் 17ம் திகதிக்கும் இடையில் வேட்புமனுக்கள் கோரப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் எவருக்கும் இல்லை என நினைக்கிறேன். அது நடைமுறைக்குச் சாத்தியமான விடயமும் அல்ல.” என்றார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »