அரச ஊழியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றத் தேவையான பணம் திறை சேரியில் இல்லை. அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் அவர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துவரும் தொழிற்சங்க போராட்டம் மற்றும் சம்பள முரண்பாடுகளுக்கு எடுக்க இருக்கும் தீர்வு தொடர்பாகக் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நாட்டு மக்களின் வரிப் பணத்திலிருந்தே அரச ஊழியர்களுக்குச் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் செலுத்தப்படுகின்றன. அதற்காக இந்த வருடம் ஒதுக்கீடு இல்லாமையால் ஜனாதிபதியினால் விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கிறது.
அனைத்து அரச திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபன நியதிச் சபைகளின் சம்பள முரண்பாடு உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் இந்த விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவில் அனைத்து தரப்பினர்களின் பிரச்சினை தொடர்பில் குழுவில் ஆராயப்பட்டு, குழுவின் பரிந்துரைக்கு அமைய அனைத்து தரப்பினர்களுக்கும் தீர்வு கிடைக்கும் வகையில் அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படும் என்ற உறுதி வழங்கி இருக்கிறோம்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையில் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள முடியுமான நிலை இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் மேற்கொள்ளலாம். ஆனால் அவர்களின் கோரிக்கைக்கமைய சம்பள அதிகரிப்போ வேறு கொடுப்பனவுகளையோ வழங்குவதற்கு தற்போது திறை சேரியில் பணம் இல்லை என்றார்.