“தேர்தலொன்றை எதிர்பார்த்து இருந்தாலும் அரசாங்கம்
தேர்தலொன்றை நடத்துமா என்ற சந்தேகம் எங்கள் மத்தியில் இருக்கிறது. பாராளுமன்றத் தேர்தல் முதலில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் அதனையும் அரசாங்கம் நடத்துமா என்று கூறமுடியாது. தோல்வியடைவோம் என்று அறிந்து கொண்டே, தேர்தலை நடத்த தற்போதைய அரசாங்கம் முன்னிலையாகுமா என்பதும் பிரச்சினைக்குரிய விடயமாகும். ஆகவே, அரசாங்கத் தரப்பிடமிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும்வரை தேர்தல் இடம்பெறும் என்று உறுதியாக நம்ப முடியாது” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
தேர்தலொன்றை எதிர்பார்த்து இருந்தாலும், தேர்தலை நடத்துவார்களா என்ற சந்தேகமே தற்போது எமக்கு இடையில் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்று அரசாங்கத்திலுள்ள பிரதானிகள் சிலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதேபோன்று, ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதென்றே நாங்கள் கருதுகிறோம்.
எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இருந்தபோதும் தற்போதைய ஆளுந்தரப்பினருக்கு தேர்தலை எதிர்கொள்ளும் நிலைமை இருக்கிறதா என்பதே பிரச்சினைக்குரிய விடயமாகும்.
கட்சித் தலைமைத்துவத்துடனான சந்திப்புகளில் தொடர்ந்து கலந்துகொள்கிறோம். பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியுமுள்ளோம். எதிர்காலத்தில் தேவைப்பட்டால் அவ்வாறான கலந்துரையாடல்களில் பங்குபற்றவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தற்போது ஒரு தரப்பினை பிரதிநிதித்துவம் செய்கிறோம். அந்த தரப்புடன் நிலையாக இருந்து வருகிறோம். அவர்களை வெற்றியடைய செய்வதற்கு முயற்சி செய்வோம். தற்போது இருக்கும் தரப்புடன் தொடர்ந்து பயணிக்கவே தற்போது எங்களின் கட்சியும் தீர்மானித்துள்ளது. எங்களின் கட்சி வேறு தீர்மானத்தை எடுக்குமாக இருந்தால் அது வேறுபட்ட விடயமாகும்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டாரவை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைப்பதற்கு முயற்சித்து பார்த்தார்கள். அந்த முயற்சியிலிருந்து பின்வாங்கியிருந்தாலும் தேர்தல் தொடர்பில் அதிகப்பட்ட சந்தேக நிலைமையே இன்னும் நிலவுகிறது. தோல்வியடைவோம் என்று அறிந்து கொண்டே, தேர்தலை நடத்த தற்போதைய அரசாங்கம் முன்னிலையாகுமா என்ற கேள்வியும் இருக்கிறது.
பொது வேட்பாளராக களமிறங்கும் எதிர்பார்ப்பு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருப்பதாக கூறினாலும், தேர்தல் விடயங்களை பேசினாலும் தான் வேட்பாளராக களமிறங்கப் போவதாக அவர் இன்னும் எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதுதொடர்பில் அவரை சுற்றியுள்ளவர்கள் கருத்து வெளியிட்டாலும் அவருக்கும் அவ்வாறான நிலைப்பாடு இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தாலும் அவர் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடும் வரை எதனையும் குறிப்பிட முடியாது. தற்போது ஆட்சியிலிருக்கும் உத்தியோகபூர்வ ஜனாதிபதியிடமிருந்து, தான் வேட்பாளராக களமிறங்குவது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை இதனை நம்ப முடியாது.
நாங்கள் இருக்கும் தரப்பை வெற்றியடையச் செய்ய அதிகபட்ச முயற்சியை எடுப்போம். அநுர குமாரவுக்கு ஆதரவு இருக்கிறதா இல்லையா என்று எங்களால் எதனையும் கூற முடியாது. நாடு தழுவிய கட்சி என்ற அடிப்படையிலும் பலமான அமைப்பு என்ற அடிப்படையிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு வெற்றியடையும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
பொதுத் தேர்தலொன்று இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் அதனை வழங்கவும் அரசாங்கம் தயாராக இல்லை என்பது புரிகிறது. இன்னுமொரு காரணமும் இருக்கிறது, ஜனாதிபதி தேர்தலில் முன்னிலையாகும் வேட்பாளர்களின் மத்தியில் சஜித் பிரேமதாச மாத்திரமே பாராளுமன்றத் தேர்தலை கோருகிறார். ஆனால், ஏனைய வேட்பாளர்கள் முதலில் ஜனாதிபதித் தேர்தலையே நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். ஆகவே, பொதுத் தேர்தலில் தம்மால் வெற்றிக்கொள்ள முடியுமென்ற அதிகபட்ச நம்பிக்கை ஐக்கிய மக்கள் சக்திக்கே இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நா.தினுஷா