மாத்தளை செயற்கை ஹொக்கி மைதானத்தையும் கொழும்பு ரீட் மாவத்தையில் உள்ள செயற்கை ஹொக்கி மைதானத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும் ஒரு சில விளையாட்டு சம்மேளனங்களில் நிலவும் சட்ட சிக்கல்களைத் தீர்த்து விளையாட்டுத்துறையில் புதிய யுகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
மாத்தளையில் உள்ள செயற்கை ஹொக்கி மைதானத்திற்கு 140 மில்லியன் ரூபாவும் கொழும்பு ரீட் மாவத்தையில் உள்ள செயற்கை ஹொக்கி மைதானத்திற்கு 160 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
மேலும், விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் 67 தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 05 தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்று இராஜாங்க அமைச்சர் ரோஹன தெரிவித்தார்.