யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளார் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று மக்கள் ஓரளவுக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில், எமது பகுதிகளில் குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் அரசாங்கத்தின் பாரிய வேலைத் திட்டங்கள் நடந்து வருகின்றன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற வகையில் வட மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக அங்கு உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான நிதிகளை ஒதுக்கி அனைவரையும் ஒன்றிணைத்து இப்பணிகளை ஜனாதிபதி முன்னெடுத்து வருகிறார்.
மேலும், யுத்த காலப்பகுதியில் அடர்ந்த காடுகளாக அன்றி, வனப்பகுதியாக அடையாளமிடப்பட்ட, மக்கள் வாழ்ந்து வந்த காணிகளின் விடுவிப்பு பணிகளும் தற்போது படிப்படியாக நடைபெற்று வருகின்றன. தற்போது நாட்டின் பெரும் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என்றார்.