ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அழைப்பின் பேரில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளார்.
அமைச்சர் அலி சப்ரி நாளைய தினம் ரஷ்யா நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதோடு, அந்நாட்டின் நிஸ்னி நோவ்கோரோடில் நாளை மறுதினம் ஆரம்பமாகவிருக்கும் பிரிக்ஸ் அமைச்சர்கள் அமர்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் குழுவின் தற்போதைய தலைவர் என்ற வகையிலும், இலங்கையுடான நீண்டகால இருதரப்பு உறவுகளைக் கொண்ட நாடாக ரஷ்யா விளங்குவதாலும் அமைச்சர் அலி சப்ரிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் அமைச்சர்கள் கூட்டமானது ‘நியாயமான உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல்’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறுகிறது.
அதேநேரம் இந்த விஜயத்தின்போது ‘குளோபல் சவுத்’ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பொன்றிலும் பங்கேற்கவுள்ளதோடு இந்த சந்திப்பின்போது அமைச்சர் அலி சப்ரி ‘உலகளாவிய நிர்வாகத்தை சீர்திருத்துவதில் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்து உலகளாவிய பாதுகாப்பை மேம்படுத்துவதில் பிரிக்ஸ் மற்றும் குளோபல் சவுத்தின் பங்கு’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றையும் கையளிக்கவுள்ளார்.
இதேநேரம், பிரிக்ஸ் அமைச்சர்கள் அமர்வுக்கு சமாந்தரமாக நடைபெறும் பக்க நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளதோடு, அமர்வினை நடத்தும் ரஷ்யாவின் ஆளும் தரப்பினருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.