Our Feeds


Thursday, June 6, 2024

Anonymous

மைத்திரியின் மன்னிப்பு செல்லுபடியற்றது - உயர் நீதிமன்றம் தீர்ப்பு !

 


பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராஜகிரிய, ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஷமந்த ஜயமஹா என்ற பிரதிவாதிக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி, குறித்த பிரதிவாதியை விடுவித்து முன்னாள் ஜனாதிபதி வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியற்றது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மனுதாரருக்கு மைத்திரிபால சிறிசேன 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

அத்துடன், பாதிக்கப்பட்ட யுவதியின் தாய் மற்றும் தந்தைக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா நட்டஈட்டை வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவிற்கு மற்றுமொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளதாகத் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், தற்போது வெளிநாட்டில் உள்ள பிரதிவாதியை உள்நாட்டு மற்றும் சர்வதேச சாசனங்களைப் பயன்படுத்தி இலங்கைக்கு அழைத்துவர தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

பிரதிவாதிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் செல்லுபடியற்றது என தீர்ப்பளிக்குமாறு கோரி பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் வழங்கியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »