வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவின் மாகாண சபைத் தேர்தல்கள் 2017ம் ஆண்டில் இருந்து நடத்தப்படாத பின்னணியில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலும் பிற்போடப்பட்டிருந்தது.
ரணில் விக்கிரமசிங்க 2017 இல் பிரதமராக இருந்தபோது மாகாண சபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டிருந்தன. இனப்பிரச்சினைத் தீர்வுக்காக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டதே மாகாண சபைகள் முறை.
ஆனால் அந்த மாகாண சபைத் தேர்தல்களைக் கூட நடத்தவிடாமல் தடுத்திருப்பது ரணில் என்று தமிழ்த் தேசியக் கட்சி உறுப்பினர்கள் பலரும் நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியிருந்தனர்.
உள்ளுராட்சி சபைத் தேர்தல்.
அதே நேரம் ரணில் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்த நிலையில்தான் கடந்த ஆண்டு உள்ளுராட்சி சபைத் தேர்தல்களும் பிற்போடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. திகதி இன்னமும் தீர்மானிக்கப்படாத நிலையில், ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்குரிய சட்ட வியாக்கியாணங்களை ரணில் ஆராய்ந்து வருவதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் யாப்பின் பிரகாரம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிப் பதவிக்குரிய ஐந்து ஆண்டுகளும் நிறைவடைந்துவிட்டால் அதற்கு அடுத்து ஒரு நாள் கூட அப்பதவியை நீடிக்க முடியாதென சட்டவல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெரும்பான்மை ஆதரவு இல்லை
நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாமல் நீடிப்பதற்குரிய சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியும். ஆனாலும் ரணிலுக்கு அரசாங்கத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாத நிலையில் நாடாளுமன்றத்தை நீடிப்பதற்குச் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியாதெனவும் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருந்தாலும் தனக்கு நெருக்கமான சட்டத்தரணிகள் மூலம் மேலும் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து ஆகக் குறைந்தது ஒரு வருடத்துக்கு ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க ரணில் முற்படுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதிப் பதவியை நீடிக்க முடியுமென சில சட்டத்தரணிகள் ரணிலுக்குப் பரிந்துரை செய்து வருவதாகவும் அறிய முடிகின்றது.
என்ன நடந்தது?
வடக்குக் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட இலங்கைத்தீவில் உள்ள முந்நூற்று நாற்பது உள்ளூராட்சி சபைகளின் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஆண்டு ஜூன் 18ம் திகதி ஆரம்பமாகியிருந்தது. 21ம் திகதி நண்பகல் 12 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்றிருந்தது.
எல்லிபிட்டிய பிரதேச சபை தவிர்ந்த ஏனைய முந்நூற்று நாற்பது உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்பு மனுத் தாக்கல் இடம்பெற்றிருந்தன.
18 மாவட்டங்களைச் சேர்ந்த 153 உள்ளூராட்சி சபைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் மாவட்டத் தேர்தல் செயலகங்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தன.
உள்ளூராட்சி சபைத் பிற்போடப்பட மாட்டாது என அப்போது அரசாங்கம் உறுதியளித்திருந்தது. ஆனாலும் பின்னர் உள்ளுராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது