கொள்கைகளின் அடிப்படையிலேயே நாட்டை முன்னேற்ற முடியும். அவ்வாறன்றி தனிநபர்கள் அல்லது கட்சிகளினால் அதனைச் செய்ய முடியாது என்று சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அநூப பஸ்குவெல் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு மக்களின் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட சீர்திருத்தங்களை தற்போதைய அரசாங்கம் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது. அதற்கு மத்தியில் நாட்டைப் பொறுப்பேற்க பலர் முன்வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களிடத்தில் அதற்கான கொள்கைகள் எவையும் இல்லை. நாட்டில் பலரும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினை ஏற்றுக்கொண்டுள்ளபோது, சிலர் மாத்திரம் அதற்குப் புறம்பாகச் செயற்படுகிறார்கள்.
யார் எவ்வாறு அறிக்கைகளை வெளியிட்டாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் வெற்றியடைந்துள்ளன என்பதே உண்மையாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டுள்ளதுடன் அதனை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடைமுறைப்படுத்தி வருகின்றது.
மேலும் கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். தனிநபர்கள் அல்லது கட்சிகளால் அதனைச் செய்ய முடியாது. கட்சிகள் மற்றும் நபர்கள் மாறுவதால் ஒரு நாட்டின் பொருளாதாரம் மாற்றம் காணாது.
அரசின் கொள்கைகள் பிரசித்தமடைந்துள்ளன. அந்த வேலைத்திட்டங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே தலைமை தாங்குகிறார் என்பது இரகசியமல்ல. அதனை ஒவ்வொரு துறைசார் நிபுணர்களும், மக்களும், பிற கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றார்.