Our Feeds


Friday, June 28, 2024

SHAHNI RAMEES

இலங்கையும் மற்றுமொரு கென்யாவாக மாறியிருக்கும்..! - ஜனாதிபதி எச்சரிக்கை

 

பொருளாதாரப் பிரச்சினை காரணமாக கென்யா பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. அதனால் கொலைகளும் இடம்பெற்று வருகின்றன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி நாடொன்றின் பொருளாதாரத்தைத் தயார்படுத்துவது மிகவும் அவசியமானது என்றும், நாட்டுக்குள் பொருளாதார நிலைமை ஏற்படுத்த தவறியிருந்தால், இலங்கையின் நிலைமையும் அவ்வாறுதான் இருந்திருக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

காலநிலை மாற்றம் இன்று உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளது. மேலும் இது ஒரு பொருளாதார பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது. எனவே, சுற்றுச்சூழலும், காலநிலை மாற்றமும் சகல துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

காலநிலை மாற்றத்தை எந்தவொரு நாடும் தனியே எதிர்கொள்ள முடியாது. அதற்காக அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் இந்த திட்டத்தை நாம் ஆரம்பித்தாலும், சில மேற்கு நாடுகள் அதிலிருந்து விலகி இருக்கின்றன. அன்று இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜொன்சன் கிளாஸ்கோ பிரகடனத்தை வெளியிட்டார்.

ஆனால் இன்று பிரித்தானிய அரசாங்கம் அதனை விட்டு வெளியேற முயல்வதை ஒரு சிறந்த உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். எனினும், இந்த விடயத்தில் அமெரிக்காவின் முடிவை நவம்பரில் நடைபெறும் தேர்தலுக்குப் பிறகுதான் தெரிந்துகொள்ள முடியும்.

இலங்கையின் கடன் பிரச்சினையை எம்மால் தீர்க்க முடியும் என நான் சுட்டிக்காட்டினேன். ஆனால், ஆபிரிக்காவில் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை தற்போது முதல் படியை எடுத்துள்ளது.

அதன்படி, நாம் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளோம். இப்போது பொருளாதார மாற்றச் சட்டத்தை நிறைவேற்றி அந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். ஆனால் ஆபிரிக்கா போன்ற நாடுகள் அந்த செயன்முறையைச் செய்வது கடினம்.

எனவே, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக ஆபிரிக்க நாடுகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய இலங்கை காலநிலை மாற்ற மாநாட்டில் முன்மொழிந்தது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நிதி ஒதுக்கீடுகள் அவசியம். இதற்குத் தேவையான பணம் இது வரை கிடைக்கவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகள் சுமார் 100 பில்லியன் டொலர்களை உக்ரைன் போரிலும் காஸா போரிலும் செலவு செய்துள்ளன. ரஷ்யா எவ்வளவு செலவழித்தது என்பது எங்களுக்குத் தெரியாது. இந்தப் பணத்தை ஆபிரிக்க நாடுகளுக்கும், ஏனைய நாடுகளுக்கும் வழங்கினால், சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

இலங்கை தனது கடனை மறுசீரமைத்து முன்னோக்கிச் செல்கிறது. அதற்குத் தேவையான ஆற்றலும் அறிவும் நம்மிடம் உள்ளது. அந்தப் பாதையில் நாம் தொடர வேண்டும். அதன்போது, நாம் போட்டிமிக்க, டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்திற்கு மாற வேண்டும். நமது சக்தியுடன் அந்தப் பயணத்தை நாம் மேற்கொள்வோம்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »