நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் அமைந்துள்ள கோகர்ணா கோல்வ் புற்தரையில் நடைபெற்ற 101ஆவது நேபாள ஆரம்பவியலாளர் கோல்வ் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் வளர்ந்துவரும் வீராங்கனை காயா தலுவத்த சம்பியன் பட்டத்தை சூடினார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு அவர் பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட 144 மொத்த நகர்வுகளை விட 2 நகர்வுகள் குறைவாக எடுத்துக்கொண்டே காயா தலுவத்த சம்பயினானார்.
இரண்டு சுற்றுகளைக் கொண்ட அப் போட்டியில் ஒவ்வொரு சுற்றையும் அவர் 71 நகர்வுகளில் நிறைவு செய்திருந்தார்.
ஒவ்வொரு குழிக்கான நகர்வுகளின்போது 4 தடவைகள் ஒரு குறைவான நகர்வுடன் குழிகளை நிறைவுசெய்த காயா தலுவத்த, மற்றொரு சந்தர்ப்பத்தில் 2 நகர்வுகள் குறைவாக எடுத்துக்கொண்டிருந்தார்.
இந்தியாவின் டியா கிறிஸ் குமார் 148 நகர்வுகளுடன் 2ஆம் இடத்தைப் பெற்றார். அதே நாட்டைச் சேர்ந்த ஆனந்தி விவேக், மான்வி சிங்கானியா 151 நகர்வுகளுடன் 3ஆம் இடத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
இப் போட்டியில் இந்தியா, நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 65 கோல்வ் வீராங்கனைகள் பங்குபற்றினர்.