Our Feeds


Wednesday, June 19, 2024

Zameera

வரிப் பணத்தை முறையாக அறவிட்டால் புதிய வரி அறிமுகப்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது - சஜித் பிரேமதாச


 வரி செலுத்த வேண்டிய பல முன்னணி வியாபாரிகள் பலர் வரிக்கொள்கைக்குள் உள்வாங்கப்படாமல் அவர்களுக்கு வரி விலக்களிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று ஒரு இலட்சத்தி 20ஆயிரம் கோடி ரூபா வரை வரி செலுத்தப்படாமல் இருந்து வருகிறது. அதனால் வரி அறவிடும் முறையை முறையாக மேற்கொண்டால் புதிய வரி கொள்கைகளை அறிமுகப்படுத்த தேவை ஏற்படாது என எதிர்க்கட்சித் தலைரவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த புதிய வரி அதிகரிப்பு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,  

அரச வருமானத்தை அதிகரித்து ஒரு இலக்குக்கு கொண்டுவர வரி அதிகரிப்பு பிரேரணைகள் முன்வைக்கப்படுகிறது. ஆனால் வரி செலுத்த முடியுமான பலர் வரி கொள்கைக்குள் உள்வாங்கப்படாமல் இருக்கின்றனர். அவர்களை உள்வாங்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரி அறவிடும் நடவடிக்கையை மிகவும் செயற்திறமையாகவும் வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்க வேண்டும். அதனை டிஜிடல் மயமாக்க வேண்டும். இதன் மூலம் வரி செலுத்துபவர்களை முறையாக இனம் கண்டு அதன் நடவடிக்கைகளை சரியான முறையில் முகாமைத்துவம் செய்ய முடியும்.

ஆனால் கடந்த வருடம் மாத்திரம் ஒரு கோடிக்கும் அதிக வரி செலுத்த வேண்டிய முன்னணி வியாபாரிகள் ஒரு இலட்சம் பேருக்கு வரி சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வரி சலுகை வழங்காமல் இருந்தால் புதிய வரி அறிமுகப்படுத்த வேவைப்பாடு இருக்காது.

புதிய வரி மூலம் அரசாங்கம் 60ஆயிரம் கோடி இலாபத்தை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஆனால் ஒரு இலட்சத்தி 20ஆயிரம் கோடி ரூபா வரி செலுத்துவது தவிர்க்கப்பட்டிருக்கிறது. அதனால் வரி செலுத்தாமல் இருப்பது, வரி செலுத்துவதை தவிர்த்து வருவது மற்றும் வரி நிவாரணம் வழங்குதல் இவற்றை சரி செய்துகொண்டால், அரசாங்கம் அறிமுகப்படுத்த இருக்கும் வரி தேவைப்படாது என நாங்கள் நம்புகிறோம்.

மேலும் ஒரு கோடி ரூபாவை தாண்டிய 4200பேர் வரி செலுத்துவதை தவிர்த்துள்ளனர். அவர்களின் வரிகளை அறவிட்டுக்கொள்ள ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர் என கேட்கிறேன்.

அதேபோன்று சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் 23 பேர்களில் 5பேர் வரி செலுத்துவதை தவிர்த்து வரும் சந்தர்ப்பத்தில் அவர்களின் சாராய விற்பனை அனுமதி மத்திரத்தை இரத்து செய்யக்கூட அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது. இவர்கள் 700கோடி ரூபா வரி செலுத்துவதை தவிர்த்துள்ளனர்.இவர்களின் அனுமதி பத்திரத்தை இரத்துச் செய்தால், நிச்சயமாக இவர்கள் வரி செலுத்த நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.

எனவே வரி செலுத்துவதை தவிர்த்து வருபவர்களிடமிருந்து முறையாக வரியை அறவிட்டுக்கொள்ளவும் வரி செலுத்த தகுதி இருந்தும் அவர்கள் இதுவரை வரி கொள்கைக்குள் உள்வாங்கப்படாமல் இருப்பவர்களை வரி கொள்கைக்குள் உள்வாங்கிக்கொள்ள நடவடிக்கை எடுப்பதன் மூலம் அரசாங்கத்துக்கு தேவையான வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியும் என நாங்கள் நம்புகிறோம்.

அதனை ஏன் அரசாங்கத்தினால் செய்ய முடியாது என்பதை நிதி அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி இது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »