உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியிலேயே நட்டஈடு செலுத்திவிட்டேன்.இருந்தபோதும், அந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக பல்வேறு நாடுகள், பல்வேறு அமைப்புகளிடமிருந்து கர்தினால் மெல்கம் ரஞ்சித்க்கு பணம் செலுத்தப்பட்டது. அந்த பணத்துக்கு என்ன நடந்தது? அந்த விபரங்களை பேராயர் முன்வைக்க வேண்டும். ஆனால், அவ்வாறு கிடைத்த பணத்தில் ஒரு சதம் ரூபா கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வில்லை” என்று முன்னாள் ஜனாதிபதியும் இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
கொழும்பில் நேற்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தின்போது கட்சிக்கு புதிய பணிக்குழாமொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களினூடாக அறிந்துகொண்டேன். ஆனால், அதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் ஆணைக்குழுவிடம் இருக்கும், என்னால் நியமிக்கப்பட்ட அமைப்பாளர்களினால் மாத்திரமே நிறைவேற்றுக்குழு பங்குபற்ற முடியும். தற்போது கட்சிக்குள் இடம்பெறும் அநேகமான விடயங்கள் போலியானவை. இவற்றுக்கு ஏமாற வேண்டாம். இந்த கூட்டம் சட்டத்துக்கு புறம்பாகவே இடம்பெற்றுள்ளது.
சுதந்திரக் கட்சி தொடர்பில் தற்போது நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு வழக்கு கூட நிறைவடையவில்லை. வழக்குகளுக்கு தடைகள் மாத்திரமே விதிக்கப்பட்டுள்ளன. தடை என்பது வேறு, வழக்கு என்பது வேறு. வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததுமே ஒரு முடிவுக்கு வர முடியும்.
அரச பலத்தை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக நாங்கள் உயர்நீதிமன்றத்துக்கு செல்லும்போதே இதிலுள்ள உண்மை நிலைமையை அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.
எனக்கு தடையுத்தரவும் இடைக்கால தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்விரு தடையுத்தரவுகளும் இருக்கும் நிலையில், வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை நான் தலைமைத்துவத்தில் இருந்தால் கட்சியின் நிலைமை தலைகீழாக மாறிவிடும்.
நீதிமன்ற தடையுத்தரவுகளுடன் நான் பதவியில் இருந்து, ஒருவேளை இன்றிரவே பாராளுமன்றத்தை கலைத்தால் எமது கட்சியின் சார்பில் எந்தவொரு மாவட்டத்திலும் வேட்பாளர்களால் போட்டியிட முடியாது. தலைவருக்கு எதிராக தடையுத்தரவும் இடைக்கால தடையுத்தரவும் இருப்பதால் வேட்பாளர்களை தேர்தல் ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளாது.
ஒருவேளை இன்றிரவே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டால் ஜனாதிபதி தேர்தலுக்கு எம்மால் வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாது. எனக்கு எதிராக தடையுத்தரவும் இடைக்கால தடையுத்தரவும் இருப்பதால் வேட்புமனுதாக்கலை தேர்தல் ஆணைக்குழு ஏற்காது. அதன் காரணமாக, ஆதரவாளர்கள் பற்றியும் நாடு பற்றியும் நாட்டின் எதிர்காலம் பற்றியும் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அமைப்பாளர்களின் எதிர்காலம் பற்றியும் சிந்தித்தே எனது பதவியை இராஜிநாமா செய்தேன்.
அவ்வாறு பதவியை இராஜிநாமா செய்திருக்காவிட்டால் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுக்கு துரோகம் இழைத்தவனாகிவிடுவோம். அதனால், வேட்பாளர்களுக்கு பாரதூரமான சிக்கலும் ஏற்படும். அதன் காரணமாகவே இராஜிநாமா செய்தேன்.
எனக்கு எதிராக இத்தனை தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள் என்றால் அதுதொடர்பில் ஒவ்வொருவரும் சிந்தித்து புரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எதிராக 400 வழக்குகள் இருப்பதால், உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவாகியுள்ளேன் என்றே கருதுகிறேன்.
பேராயரின் தலைமைத்துவத்தில் எனக்கு எதிராக 400 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கும் கை கால்களை இழந்தவர்களுக்கும் நட்டஈடு செலுத்துமாறு இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால், நான் ஜனாதிபதியாக இருந்தபோது, பாதிக்கப்பட்ட சகலருக்கும் நட்டஈடு செலுத்தினேன். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் கத்தோலிக்க அமைப்புகள், உலக நாடுகள், பல்வேறு அமைப்புகள், இலங்கையிலுள்ள உயர்மட்ட வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கர்தினாலுக்கு பணம் கிடைத்தது. அந்த பணத்துக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான விபரங்களை தயவு செய்து கர்தினால் முன்வைக்க வேண்டும். எனக்கு இவ்வளவு பணம் கிடைத்தது. அவற்றை இவ்வாறு பகிர்ந்தளித்து விட்டேன் என்று பேராயர் பெயர் விவரங்களை அறிவிக்க வேண்டும்.
ஆனால், அவ்வாறு கிடைத்த பணத்தின் ஒரு சதம் ரூபா கூட பாதிப்படைந்தவர்களுக்கு வழங்கவில்லை. அவ்வாறு இருக்கையில், நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச நிதியை பெற்றுக்கொடுத்தும் என்னை நட்டஈடு செலுத்துமாறு தெரிவித்து எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள். இதுவே தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையாகும் என்றார்.