Our Feeds


Wednesday, June 19, 2024

SHAHNI RAMEES

பெசிலின் முயற்சிகளை தோற்கடிப்பேன் – திலித் ஆவேசம்

 

 

‘‘நாட்டை காட்டிக்கொடுப்பதற்கு பெசில் ராஜபக்ஷ எடுக்கும் முயற்சிகளை தோற்கடிப்பதில் முக்கிய பொறுப்பு எனக்கிருக்கிறது. அதேபோன்று கோட்டாவை ஜனாதிபதியாக்க வழங்கிய ஒத்துழைப்புகளுக்காக மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். மேலும், எதிர்காலத்தில் நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதென்றால் எமது வேலைத்திட்டங்களை முன்வைத்து அதன்பிரகாரமே உங்களிடம் வாக்கு கோருவோம். பொய்வாக்குறுதிகளை வழங்கி வாக்கு கோருவதோ அதிகாரத்துக்காக இழிவான செயற்பாடுகளை முன்னெடுப்பதோ எங்களின் இலக்கு இல்லை’’ இவ்வாறு மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

 

சர்வசன அதிகார அரசியல் கூட்டணியின் முதலாவது மக்கள் சந்திப்பு நேற்று (18) நுகேகொடையில் இடம்பெற்றது. அதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

 

பெசில் ராஜபக்ஷ இந்த நாட்டை காட்டிக்கொடுப்பதற்கு முன்னெடுக்கும் முயற்சிகளை தோற்கடிக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. இந்த நாட்டின் எதிர்காலத்துக்காக கோட்டாவை ஜனாதிபதியாக்குவதற்கு நானும் பின்னணியில் பெரும் பங்காற்றியிருக்கிறேன். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம். இதற்கு மேலும் என்னால் அமைதியாக இருக்க முடியாது. அரசியலுக்கு வரும் எதிர்பார்ப்பில் நான் இருக்கவில்லை. நான் இந்த நாட்டின் வர்த்தகர். இருந்தபோதும் நாட்டுக்கான எங்களின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. அதன் காரணமாகவே இன்று நாங்கள் ஒன்று கூடியுள்ளோம்.

 

ரணிலாக இருந்தாலும் பெசிலாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவர்கள் எல்லாம் ஒரே கூட்டணி. ஆனால், நாங்கள் அவர்களில் இருந்து வேறுபட்டவர்கள். அப்பாவி மக்கள் மத்தியில் விரோதத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அதனை நாங்கள் எதிர்க்கிறோம்.

 

உங்கள் வாழ்க்கை எவ்வாறு மாற்றுவது என்று நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். இது சம்பிரதாய பூர்வமான அரசியல் கூட்டமும் இல்லை. இந்த கூட்டத்தின் முடிவில் மக்கள் ஏதாவதொன்றை அறிந்து வைத்திருக்க வேண்டும். ஏனைய நாடுகளை முன்னூதாரணமாக கொண்டு எமது தொழிற்றுறையை மேம்படுத்துவதை தவிர வேறு மாற்றுத் தீர்வுகள் எதுவும் இல்லை. ஏனைய நாடுகளிடமிருந்து கற்று அதனை எவ்வாறு நமக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு முன்னோக்கி செல்வது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.

 

சமுர்த்தி கொடுப்பனவு 2,500 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவாக அதிகரித்தமையினால் மாற்றம் ஏற்படப்போவதில்லை. குறைந்தது 40,000 ரூபா அவசியமாகும். குறைந்தது ஒரு குடும்பத்துக்கு ஒரு இலட்சம் ரூபா இல்லாமல் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. ஆனால் தொழில் முனைவோருக்கான அரசாங்கத்தில் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடிய வேலைத்திட்டங்களை எங்களால் முன்வைக்க முடியுமென்று நம்புகிறோம். அதனூடாக ஒரு குடும்பத்தின் குறைந்த வருமானத்தை ஒரு இலட்சம் ரூபாவாக்கும் முறையை எங்களின் வேலைத்திட்டங்களினூடாக உங்களுக்கு கற்றுக்கொடுப்போம். எமது அண்டைய நாடான இந்தியா உட்பட அபிவிருத்தியடைந்த நாடுகள் எவ்வாறான உபாய முறைகளை கையாண்டு அவர்களின் கொள்கைகளை மாற்றியமைத்துகொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து வைத்திருக்கவேணடும். அவர்களால் அதனை செய்ய முடியுமென்றால் அதனைவிட அதிகம் எம்மால் செய்ய முடியும். இந்தநாட்டை ஒரு சிங்கப்பூராகவோ அல்லது அமெரிக்காவாகவோ மாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எமது தாய் நாட்டை பாதுகாத்துக்கொள்வதே எமக்கு அவசியம். அதனூடாக உங்களில் மகிழ்ச்சியை உருவாக்குவதே எங்களின் அவசியமாகும்.

 

அந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கான உபாய முறைகள் எவை? உங்களிடம் முன்வைப்போம். அந்த உபாய முறைகளின் அடிப்படையிலேயே, நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதென்றால் உங்களிடம் வாக்கு கோருவோம். அவ்வாறு இல்லாமல் அடிமைத்தனமாக வாக்கு கோரப்போவதும் இல்லை. பொய் வாக்குறுதிகளை வழங்கியும் வாக்கு கோரப் போவதும் இல்லை. அதிகாரத்துக்கான எந்த இழிவான செயற்பாடுகளையும் முன்னெடுக்கப் போவதுமில்லை.

 

நாம் வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்பட்டதால் எமக்கு வறுமை ஏற்படவில்லை. அப்பாவி மக்களின் பிரார்த்தனைகள், எதிர்பார்ப்புகள் தொடர்பில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, மனச்சாட்சி இல்லாத அரசியல்வாதிகளினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அவ்வாறான அரசியல்வாதிகள் இன்று ஒன்றுபடும் விதத்தை நீங்களே அவதானித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

 

மாற்றியமைக்கவேண்டிய பிரதான காரணங்களில், தற்போதுள்ள இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றவேண்டும். அதன் காரணமாகவே ஒரே மாதிரியாக சிந்திக்கும் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். எப்போதும் சிந்தித்து கவலையடைய முடியாதவொரு மக்கள் சந்திப்பு இது. உங்களின் தீர்மானங்களினால் உங்களுக்கு கவலை ஏற்படுத்த நாங்கள் இடமளிக்க மாட்டோம். இன்றிலிருந்து எங்களின் வேலைத்திட்டங்களை இடைக்கிடை மக்களுக்கு அறிவிப்போம்.

 

எங்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பான முதலாவது யோசனை எதிர்வரும் 27ஆம் திகதி வெளியிடுவோம். அதன் பின்னர் உங்களின் நிலைப்பாடுகளின் அடிப்படையில் இறுதி யோசனைகளை உங்களுக்கு அறிவிப்போம். என்றார்.

 

(நா.தினுஷா)


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »