அரசியல் பழிவாங்கும் நோக்கில் நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட பல வீட்டுத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கவனம் செலுத்தி இதனால் பாதிக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
2019 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு, எமது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஏராளமான வீட்டுத் திட்டங்கள் ஒரே நேரத்தில் இடை நிறுத்தப்பட்டன. இதன்கீழ் இலட்சக்கணக்கில் வீடுகள் நிர்மாணிக்க வழங்கப்பட்ட நிலுவைத் தவணை கூட இடை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த வீடமைப்புத் திட்டங்களால் பயனடைந்தவர்களுக்கு இந்தியாவில் இருந்து பெறப்படும் உதவிகள் கூட நிறுத்தப்பட்டுள்ளது .
கோத்தாபய ராஜபக்ஷ் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டது. வடக்கு கிழக்கு பிரதேச மக்கள் கூட இது குறித்து என்னிடம் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள தவணையை பெறாமல், வீடுகளை பூரணப்படுத்த முடியாமல் தவிக்கும் ஏராளமான மக்கள் நாடு முழுவதும் இருப்பதால், இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஜனாதிபதி அவருக்கு தேவையான நிதியை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொண்டார். இவ்வாறு அவர் ஒதுக்கிக் கொண்ட நிதியைப் பயன்படுத்தியேனும் இந்தத் நிலுவைத் தவணைகளை வழங்கி, அவர்களின் வீடுகளை பூரணப்படுத்துவதற்கு ஒத்துழைப்பை நல்க வேண்டும், அவ்வாறு இந்த அரசாங்கம் இந்நடவடிக்கையை முன்னெடுக்காவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த வேலைத்திட்டம் உடனடியாக முன்னெடுக்கப்படும் என்பதை நாங்கள் உறுதியாகவும் தெளிவாகவும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.