Our Feeds


Thursday, June 27, 2024

SHAHNI RAMEES

ரணிலுக்கு 12 வருடங்களுக்கு ஆட்சி பொறுப்பை வழங்க வேண்டும்! - வஜிர

 

“நாட்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ச்சியாக 12 வருடங்களுக்கு ஆட்சி பொறுப்பை வழங்கினால் ஆசியாவிலேயே பலம் கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவார்” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார். 



காலி, ரத்கம தொகுதியின் கட்சியின் பிரதான அலுவலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,



ஒரு நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டால், அந்த நாடு மீண்டும் வழமைக்கு திரும்புவதற்கு குறைந்தது 07 முதல 10 வருடங்களாவது தேவைப்படும். ஆனால், ஜனாதிபதி இரண்டு வருடங்களுக்குள் நிலைமை தீவிரமடைந்திருந்த சந்தர்ப்பத்திலும் மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு 15 ஆயிரம் ரூபா பணத்தை வைப்பிலிட நடவடிக்கை எடுத்தார்.



அது மாத்திரமல்லாமல் தமது தரை, ஆகாயம் உரிமையை 30 இலட்சம் ரூபாவுக்கு கொடுத்துள்ளார். அப்படியானதொரு சந்தர்ப்பத்திலேயே இந்த நாட்டை அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.



எமது முன்னாள் ஜனாதிபதிகள் சகலரும் 612 வருடங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆனால், நாட்டு மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அந்த வாய்ப்பை வழங்கவே இல்லை. ஆனால், விதிப்படியும் இயற்கையாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு அந்த பதவி பெற்றுக்கொடுக்கப்பட்டது.



இயற்கையாக பெற்றுக்கொடுக்கப்பட்ட இந்த இரு வருடங்களில், முன்னாள் ஜனாதிபதிகள் 35 – 40 வருடங்களில் செய்தவற்றை செய்து நிரூபித்திருக்கிறார். எனவே, சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது. நாடு வங்குரோத்து நிலைமையிலிருந்து விடுவிக்கப்படும் என்பதே எங்களின் நூறு சதவீத நம்பிக்கையாகும். எனவே, நாட்டை படிமுறையாக முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டியுள்ளது. மாற்று வழிகள் எதுவும் இல்லை.



இதற்கு அப்பால் மக்கள் சிந்தித்து செயலாற்றாவிட்டால் இலங்கை காலனித்துவமாக மாறிவிடும். அதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும். கடனை பெற்றுக்கொண்டு அதனை மீள செலுத்தாவிட்டால் கடன் வழங்கியவர்கள் குறித்த சொத்துகளை கைப்பற்றுவார்கள். இதுவே கடன் கொடுக்கல் வாங்கலிலுள்ள இயல்பாகும்.



இதனை கருத்திற்கொண்டு, இலங்கையின் எதிர்காலத்துக்காக நாட்டின் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பிக்கும் இந்த வேலைத்திட்டத்தின்படி, பேதங்களின்றி செயற்பட வேண்டும்.



ஆகவே, ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். தேசிய பாதுகாப்புக்காக அவர் முன்னிலையாக வேண்டும். ஜனாதிபதியாக மேலும் 12 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தால், இலங்கை ஆசியாவிலேயே சிறந்த நாடாக மாற்றமடையும்.



2020ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு வரையில் தடைப்பட்டிருக்கும் வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையும்.



இலங்கை தொடர்பான சர்வதேசத்தின் நம்பிக்கை உருவாகும். இலங்கையுடனான சர்வதேசத்தின் கொடுக்கல் வாங்கல்கள் வழமைக்கு திரும்பும். கடன் செலுத்தாமை தொடர்பில் தற்போது வரையில் அமெரிக்காவில் மூன்று வழக்குகள் இருக்கின்றன. அந்த வழக்குகளிலும் மாற்றம் ஏற்படும். மேலும், பொருளாதார மேம்பாடு தொடர்பான சட்டமூலமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



ஜூலை 02ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சிறப்புரை நிகழ்த்துவார். அதன் பின்னர் அந்த சட்டத்துக்கான அனுமதியை பெற்றுக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »