Our Feeds


Thursday, June 13, 2024

Zameera

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க நடவடிக்கை


 மாகாண மட்டத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

மாகாண ஆளுநர்களுடன் நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய பாடசாலைகளுக்கு 2500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை 03ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் படி, இரசாயனவியல், பௌதிகவியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம், சர்வதேச மொழிகள் ஆகிய பாடங்களுக்கு 2100 ஆசிரியர் நியமனங்களையும்,2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆங்கில மொழிமூல உயர் டிப்ளோமா பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 500 ஆசிரியர்களை நியமிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் மூலம் தேசிய பாடசாலைகளில் குறித்த பாடங்களுடன் தொடர்புடைய ஆசிரியர் வெற்றிடங்கள் பெருமளவில் நீங்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்துடன், ஆங்கில மொழிமூல ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது ஓய்வு பெற்ற ஆங்கில மொழிமூல ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், கல்வி நிர்வாக சேவை மற்றும் ஆசிரியர் கல்வி சேவை ஆகியவற்றில் உள்ள உத்தியோகத்தர் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் துரித வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »