“சர்வசன வாக்கெடுப்பை நடத்தி இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குத்
தாமே ஆட்சிசெய்ய முடியுமா என்று பார்க்க பட்டத்தைப் பறக்கவிட்டுப் பார்க்கிறார்கள். அதனை ஒருபோதும் ஏற்க முடியாது. அரசியலமைப்பொன்று இருக்கிறது. அதன் பிரகாரம் ஐந்து வருட ஆட்சி நிறைவின் பின்னர் கட்டாயம் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும். எமது உரிமைகளைப் பறிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை” என்று கார்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.கொழும்பு ஆயர் மெக்ஸ்வெல் சில்வாவால் எழுதப்பட்ட ‘இலங்கையில் கிறிஸ்தவ தர்மத்தைக் கற்பிப்பதற்கான சவால்கள்’ என்ற தலைப்பிலான நூலின் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்றது.
அந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
நாங்கள் ரெஜிமண்ட் சமூகத்தில் இல்லை. பட்டம் அனுப்பும் விதம் தெரியுமா? இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்காக மக்களின் வெறுப்புக்குள்ளான ஆட்சியாளர்களே மீண்டும் இந்த நாட்டை ஆட்சி செய்ய சர்வசன வாக்கெடுப்பை நடத்த முடியுமா என்பதைப் பார்ப்பதற்காக பட்டம் விடுகிறார்கள்.
அதனை ஒருபோதும் ஏற்க முடியாது. அரசியலமைப்பொன்று இருக்கிறது. அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு ஐந்து வருட காலம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஐந்து வருடங்கள் நிறைவடைந்ததன் பின்னர் அவர்கள் தேர்தலை நடத்த வேண்டும். பிரஜைகள் என்ற அடிப்படையில் அது எமது உரிமையாகும்.
அரசாங்கத்தால் எமது உரிமைகளைப் பறிக்க முடியாது.
குழந்தையிடமிருந்து அதன் கெளரவத்தை எவ்வாறு பறிக்க முடியாதோ, அதேபோன்று சுதந்திரத்துக்கான எந்தவொரு விடயத்தையும் அரசாங்கத்தால் பறிக்க முடியாது. இதுவரையில் கண்டது சகலதும் போதும். சுதந்திரமான தேர்லொன்றினூடான எமது தலைவர்களைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும். அது எமது உரிமையாகும். அது எமக்கு அவசியமானதாகும் என்றார்.