இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் முதன்முறையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இன்டர்நெசல் இன்டஸ்ரியல் எக்ஸ்போ- 2024 (சர்வதேச கைத்தொழில் கண்காட்சி) நேற்று முன்தினம் ஆரம்பமானது. இந்தக் கண்காட்சியைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்நாட்டின் கைத்தொழில் துறையின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரன விசேட கவனம் செலுத்தி செயற்பட்டு வருகின்றார். அதன் ஒரு கட்டமாக இந்த தொழில் கண்காட்சியைக் குறிப்பிடலாம். இது நாட்டிலே நடத்தப்படும் மிகப்பெரிய கண்காட்சியாகும்.
கடந்த காலத்தில் நமது நாடு வங்குரோத்தடைந்த நாடாக மாறியிருந்தது. ஆனால் அடுத்த சில வாரங்களில் நாம் வங்குரோத்தடைந்த நாடு என்ற அவப்பெயரில் இருந்து முற்றிலும் விடுபடுவோம். இது தொடர்பான ஒப்பந்தமும் அடுத்த சில வாரங்களில் எட்டப்பட உள்ளது. இதன்மூலம், தனியார் கடனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எளிதாகிறது. எனவே இந்த பணியை இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்வோம்.
ஆனால் இதில் மட்டும் திருப்தி அடைய முடியாது. இந்தக் கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். பல வருடங்களுக்கு முன்னர் பெற்ற கடனை மீளச் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கு 2042 வரை கால அவகாசம் கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.