அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரித் திட்டங்களை வினைத்திறனுள்ளதாக்கி அதன் பயன்களை மக்களுக்கு துரிதமாக வழங்குவதற்கு ஆளுநர்கள் பங்களிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மாகாண ஆளுநர்களுடன் நேற்று முன்தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மாகாண மட்டத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை விரைவாகத் தீர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் உறுமய காணி உறுதி வழங்கும் திட்டத்தின் வினைத்திறன் என்பன குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
உறுமய காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கு கிராம உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக மற்றுமொரு குழுவிற்கு அதிகாரத்தை வழங்கி நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியத்தை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் மக்களை ஆர்வமூட்டி, அவர்களுக்கு அந்த நன்மையை வழங்க வேண்டிய பொறுப்பு பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைவுகூர்ந்தார்.