Our Feeds


Thursday, June 13, 2024

Zameera

தேர்தல்கள் நடைபெறுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது - ஹக்கீம்


 ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும் சரி, அல்லது பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி அதற்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றபோதும் தேர்தல்கள் நடைபெறுமா என்ற அச்சம் எமக்கு வெகுவாக ஏற்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் 12ஆம் திகதி புதன்கிழமை இலங்கை புலனாய்வு ஊடகவியல் நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நேர்மையான தேர்தலை ஊக்குவித்தல்: அரசியல் கட்சிகளின் வகிபாகம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாங்களும், ஒட்டுமொத்தமான முழு நாடும் தேசிய தேர்தல்களை எதிர்பார்த்திருக்கின்றது. பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, அல்லது ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும் சரி நாம் அதனை முகங்கொடுப்பதற்கு நாம் தயாராகவே உள்ளோம். 

ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தேர்தல்களை நடத்துமா என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டள்ளது. ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளார். அவ்விதமான பின்னணியிலேயே எமக்கு சந்தேகம் ஏற்படுகின்றது. 

அதேநேரம், அரசாங்கத்துக்கு தாம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சம் தீவிரமாக ஏற்பட்டுள்ளது. அதன் காரணத்தினாலேயே ஏதேவொரு வகையில் தேர்தல்களை தாமதப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது என்பது வெளிப்படையான விடயமாகும். அரசாங்கம் நிச்சயமற்ற நிலையிலேயே உள்ளது.

இதேவேளை, நாம் தற்போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் உள்ளோம். நாம் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வருகின்றோம். அவருடைய வெற்றிக்கா உழைத்து வருகின்றோம். எதிர்வரும் காலங்களில் எமது கட்சி தீர்மானத்தினை மாற்றினால் மாத்திரமே அதுபற்றி கரிசனை கொள்ள வேண்டும். 

அதேநேரம் ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் என்று அரசாங்கத்தின் பிரதானிகள் கூறினாலும் எனக்குக் கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் தேர்தல்களை தாமதப்படுத்துவதற்கு பல்வேறுவிதமான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »