நுவரெலியா – நானு ஓயா – உடரதல்ல தோட்டம் மற்றும் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடாத்துமாறு நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்ஸிடம், அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை முன்வைத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
அமைச்சரவை அமைச்சர் மற்றும் மலையக மக்களின் பிரதிநிதி என்ற வகையிலும் பிரபல அரசியல் கட்சி ஒன்றின் பொது செயலாளர் என்ற வகையிலும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
“பொறுப்புள்ள அரச ஊழியர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் என்ற வகையில் இது எனது கடமை என நான் கருதுவதால், இந்த விடயம் தொடர்பில் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.
குறித்த சம்பவங்கள் நடந்த நேரத்தில் நடந்தவற்றின் உண்மைத் தன்மையை முழுமையாக ஆராய்ந்து, பொறுப்புள்ள அனைத்து நபர்களும் பொறுப்புக் கூற வேண்டியது அவசியம் என்றும் நான் நம்புவதாக அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். அத்தகைய விசாரணையானது, நமது அரசு மற்றும் சமூகத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கொள்கைகளை வலுப்படுத்துவது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கோரியுள்ளேன்” என அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.