Our Feeds


Thursday, June 20, 2024

Zameera

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதியின் தலைமைத்துவம் பெரும் உதவியாக அமைந்தது


 அனைத்து அம்சங்களிலும் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்துவம் பெரும் உதவியாக அமைந்ததாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ பி. ஹேரத் தெரிவித்தார்.

வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிவாரணத் திட்டங்களை சீர்குலைத்து, அனுபவமற்ற தரப்பினரிடம் கையளித்து நாட்டை மீண்டும் பாதாளத்திற்கு கொண்டு செல்வதா என்பதை மக்கள் நன்கு சிந்தித்து தீர்மானிக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

மேலும், கொரோனா பாதிப்பால் உலகின் பல நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. சில நாடுகளால் இன்னும் அந்த நிலையிலிருந்து மீள முடியவில்லை. ஆனால் இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் அதிலிருந்து விடுபட்டு நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல எம்மால் முடிந்தது என்று இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட எமது நட்பு நாடுகளின் ஆதரவின் காரணமாக எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியிலிருந்து விடுபட்டு வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது.

அதன் பலனை மக்கள் தற்போது கண்டுகொள்ள முடிந்துள்ளது. எனினும், ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து எதிர்க்கட்சிகள் சிலர் நாட்டின் அபிவிருத்திப் பணிகளை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

எனவே, அனுபவமற்ற தரப்புகளுக்கு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சந்தர்ப்பம் வழங்கி நாட்டை மீண்டும் பாதாளத்திற்கு இழுத்துச் செல்வதா? இல்லையா? என்பதை மக்கள் சரியாகச் சிந்தித்து தீர்மானிக்க வேண்டும்” என்று கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ பி. ஹேரத் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »