நானுஓயா உடரதல்ல தோட்ட அதிகாரிக்கு எதிராக கடந்த
முப்பது நாட்களாக தோட்ட தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.
இதனையடுத்து நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் கடந்த மாதம் 30 ஆம் திகதி நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.பி.சக்திவேல் , களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ,தோட்ட தலைவர்கள் உட்பட சில முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுபேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றது.
இதனை தொடர்ந்து அன்று மாலையில் நுவரெலியா பீட்ரு தோட்ட தொழிற்சாலைக்கு சென்று களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் சொந்தமான தோட்ட அதிகாரிகளுடன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு குறித்த தோட்ட தலைவர்கள் மூவருக்கு மீண்டும் தொழில் பெற்றுக் கொடுக்கப்பட்டது .
அதன் பின்னர் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் தோட்ட அதிகாரிகளால் அமைச்சரான ஜீவன் தொண்டமானுக்கும் , முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.பி.சக்திவேலுவுக்கும் எதிராக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர் .
பீட்ரு தோட்டத்தில் கடந்த (30) திகதி தவறான முறையில் செயற்பட்டனர், என தெரிவித்து குறித்த இருவருக்கும் எதிராகவே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இன்று (01) நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அமைச்சர் ஜீவன் தொண்டமானும் , முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.பி.சக்திவேலும் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் சுமார் இரண்டரைமணி நேரத்திற்கு மேலாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ அதிகாரிகளினால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை வாபஸ் பெற செய்தனர் .
குறித்த நேரத்தில் நுவரெலியா பொலிஸ் நிலைய பகுதிகளில் அதிகமாக தோட்ட தொழிலாளர்களுக்கும் தோட்ட தலைவர்களும் வருகைத்தந்திருந்தமையால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
நானுஓயா நிருபர்