எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு
தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக TMVP கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் TMVP கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (22) மட்டக்களப்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு ஆதரவு வழங்கினால் மண்ணை நம்பி வாழும் கிழக்கு மக்களுக்கு சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்புக் கிடைக்கும் என சிவநேசதுரை சந்திரகாந்தன் இங்கு தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதுடன் இனப்பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு வழங்கப்படும். அதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்ததுடன், எதிர்வரும் 05 வருடங்களில் கிழக்கு மாகாணத்தை விரிவான அபிவிருத்திக்கு கொண்டு செல்லும் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாகவும் வலியுறுத்தினார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
நாட்டில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்கும் அதேவேளையில், இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண நாம் பாடுபட வேண்டும். மேலும், இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். கிழக்கு மாகாணம் வளர்ச்சி குறைந்த மாகாணமாகும். அடுத்த 05 வருடங்களிலும் கூட இந்த மாகாணத்தை அபிவிருத்தி குறைந்த மாகாணமாக கைவிட்டுவிட முடியாது. எனவே கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான வேலைத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதன்போது மக்களின் வருமான நிலையை உயர்த்த வேண்டும்.
மேலும், நாட்டின் வளர்ச்சியடையாத ஏனைய மாகாணங்களை அபிவிருத்தி செய்யத் தேவையான வேலைத்திட்டத்தை நாங்கள் அமுல்படுத்தி வருகின்றோம். திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக இந்தியா மற்றும் ஏனைய வெளிநாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம். மேலும் இப்பகுதிகளுக்கு புதிய தொழில்களையும், முதலீடுகளையும் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தால், புதிய நிலம் விளைச்சளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் மக்கள் பெருமளவு வருமானம் ஈட்ட முடியும். மேலும், இந்தப் பகுதியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும். ஹிகுரக்கொட விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுவதன் மூலம் திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, தம்புள்ளை, அனுராதபுரம் ஆகிய பிரதேச மக்களும் நன்மையடைவார்கள். மட்டக்களப்பு விமான நிலையமும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இந்த சவாலை நாம் ஏற்க வேண்டும். அந்த சவாலை வென்று கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றுவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம். மேலும், இனப்பிரச்சினையை இனியும் இழுத்தடிக்க வேண்டிய அவசியமில்லை, அதனை விரைவாக தீர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
TMVP கட்சியின் தலைவர் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்
‘’இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்கதொரு நாளாகும். கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களின் தலைவிதியிலும் எதிர்கால அபிவிருத்தியிலும் ஒரு புள்ளியாக அமையும் என்பதில் ஐயமில்லை. எமது மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணம் விவசாயம் மற்றும் மீன்படித் துறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த மாகாணத்தில் இருக்கின்ற பொருளாதார வளங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றால் நிச்சயமாக ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைய வேண்டும். ஏனென்றால் இங்கு உள்ள வளங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற கொள்கையோடு அவர் இருக்கின்றார். அதனால்தான் நாம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை மாகாண சபை மூலம் இயன்றளவு வழங்குவதுடன் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறுகின்றார். எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் இந்த தீர்வுகளைப் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. எனவே அதற்கு அவசியமான சூழலையும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கிக் கொடுக்கும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது. தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி நிலையிலும் கூட மட்டக்களப்பு மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு அவசியமான நிதிகளை ஒதுக்கித் தந்துள்ளார். நாம் அவற்றுக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
நாட்டின் நிர்மாணத்துறை, உற்பத்தித் துறை, விவசாய நவீனமயமாக்கல், மீன்படித்துறை, தொழில்நுட்பத் துறை மற்றும் AI தொழிநுட்பம் போன்றவற்றை உயர் மட்டத்திற்கு கொண்டு வரக்கூடிய ஆற்றல், அறிவு மற்றும் திட்டமிட்ட அடிப்படையில் பணியாற்றக்கூடிய தலைவராக ஜனாதிபதி இருக்கின்றார். இவற்றை முன்னேற்றும் வேலைத்திட்டங்களை அமுலாக்கக் கூடிய நிர்வாக வாய்ப்பை பெற்றுக்கொடுத்தால் மண்ணை நம்பி வாழும் கிழக்கு மாகாண மக்கள் நிச்சயமாக சொந்தக் காலில் நிற்பார்கள். எமது அழைப்பையேற்று எமது அலுவலகத்திற்கு வருகை தந்தமைக்காக ஜனாதிபதிக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறேன். ‘’ என்று தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதேவேளை, முற்போக்குத் தமிழர் கழகத்தின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எஸ். வியாழேந்திரனின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். அங்கு கட்சி உறுப்பினர்கள் உட்பட இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.