Our Feeds


Thursday, June 20, 2024

Anonymous

மக்காவில் கடும் வெப்பத்தினால் இலங்கையர் ஒருவர் உட்பட 922 பேர் மரணம் | என்ன நடக்கியது சவுதியில்?

 



மக்காவில் கடும் வெப்ப அலை வீசி வரும் நிலையில், ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 922 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதில், இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் இந்தியாவைச் சேர்ந்த 90 பேரும் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அவர்களை தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


ஜம்மு - காஷ்மீரில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொண்ட 9 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் இருவர் வீதி விபத்திலும் மற்றவர்கள் வெப்ப அலை மற்றும் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகளாலும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களில் வசதி பெற்றவர்கள் மக்கா நகருக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை ஜூன் 14-ல் தொடங்கியது. தியாக திருநாளைக் கொண்டாடும் வகையில் சவுதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மக்காவில் இந்தாண்டு 20 இலட்சம் பேர் வரை திரண்டுள்ளனர்.


இந்த நிலையில், இந்தாண்டு சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் நிலவி வருகின்றது. வெப்ப தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், மக்காவில் நாள்தோறும் 50 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பம் பதிவாகி வருகின்றது.


இதனால், வெப்பம் தாங்க முடியாமல் 922 பேர் உயிரிழந்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


அதில், 600 பேர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மேலும், 1,400-க்கும் அதிகமான எகிப்து நாட்டவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தேடி வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்தியாவில் இருந்து 1.75 இலட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்ட நிலையில், இதுவரை 90 பேர் வெப்பம் தாங்காமல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


மேலும், இலங்கை, ஜோர்தான், இந்தோனேசியா, ஈரான், செனகல், துனிசியா மற்றும் குர்திஸ்தான் ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டவர்கள் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளன.


இருப்பினும், தற்போது வரை சவுதி அரேபியா அரசுத் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »