சவூதி - மக்காவுக்கு பயணம் மேற்கொண்டு இலங்கை திரும்பிய மௌலவி ஒருவரும் அவருடன் அங்கிருந்து திரும்பிய மற்றுமொரு பெண்ணும் அவர்கள் கடத்தி வந்த நகைகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் சவூதி அரேபியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்த நகைகளை இலங்கைக்கு கொண்டு வந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளியே அனுப்ப முயற்சித்துள்ளனர்.
இவ்வாறு கொண்டுவரப்பட்ட நகைகளின் பெறுமதி ஒரு கோடியே தொண்ணூறு இலட்சம் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலைய சேவை வளாகத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் - கல்முனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 44 வயதுடைய மௌலவி ஒருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணுக்கு 49 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் நேற்று முன்தினம் பிற்பகல் 02.56 மணியளவில் எதிஹாட் விமான சேவைக்கு சொந்தமான EY-390 விமானம் மூலம் சவூதி அரேபியாவிலிருந்து இலங்கை வந்துள்ளனர்.
அனைத்து விமான நிலைய சோதனைகளையும் முடித்துக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்காக வருகை முனையத்திற்கு வந்த போது விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அவர்களது பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 859 கிராம் எடையுள்ள 24 கரட் மற்றும் 22 கரட் எடையுள்ள நெக்லஸ்கள், வளையல்கள், மோதிரங்கள், காதணிகள் உள்ளிட்ட நகைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த இருவர் மற்றும் அவர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த நகைகள் என்பன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது மற்றும் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.