கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 8,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அறுதி உறுதிப் பத்திரங்களை அடுத்த மாதம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தவிர தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை 1,070 உறுதிப் பத்திரங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
கடந்த வரவு- செலவுத் திட்டத்தில் கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் 50,000 பேருக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி இந்த உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட 22 குடியிருப்பு வீடுகளில் 14,559 வீடுகள் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான உரிமைப் பத்திரங்களை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை முதலில் வழங்குகின்றது.
சில விதிகள் மற்றும் விதிமுறைகளின் சிக்கலான சூழ்நிலையால் இந்த வீடுகளின் உரிமை தாமதமானது. ஏற்கெனவே சட்டமா அதிபருடன் கலந்துரையாடி தேவையான ஆலோசனைகளை பெற்றுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.
"உறுமய" அறுதி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக 2024ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தில் இரண்டு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.