Our Feeds


Sunday, June 2, 2024

ShortNews Admin

அம்பாறையில் வாள்வெட்டு - 7 பேர் படுகாயம்

 

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாள்வெட்டுக் குழுவொன்று வீடு ஒன்றில் நுழைந்து இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி வீட்டையும் சேதமாக்கியதோடு, வீதியில் சென்றவர்கள் மீது நடத்திய தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வாள்வெட்டு குழுவினருக்கும் வாச்சிக்குடா பிரதேசத்தைச் இளைஞர் ஒருவருக்கும் இடையே மரண வீடு ஒன்றில் வாய்த்தர்கம் ஏற்பட்டது.


இதன் காரணமாக குறித்த இளைஞனை பழிவாங்குவதற்காக சம்பவதினமான நேற்று இரவு 7.30 மணியளவில் வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்டவர்கள் மோட்டர் சைக்கிள்களில் வாள்களுடன் அவரை தேடி சென்ற நிலையில், அவர் அங்கு இல்லாத நிலையில், அந்த பகுதியில் வீதியில் வந்த அந்த இளைஞரின் நண்பன் மீது தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடி அவரது சகோதரியின் வீட்டினுள் புகுந்துள்ளனர்.


இதனையடுத்து அவரை துரத்திச் சென்ற வாள் வெட்டுக்குழு அவரின் சகோதரியின் வீட்டின் பொருட்களை உடைத்து அந்த இளைஞன் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.


இதனை தடுக்க சென்றவர்கள் மீதும் வாளால் வெட்டி தாக்குதல் நடாத்தினர்.  


அதேவேளை இந்த வாள்வெட்டு குழுவின் அராஜகத்தையடுத்து அங்கு சென்றவர்கள் வீதியால் சென்றவர்கள் மீதும் வாளால் வெட்டி தாக்குதல் நடாத்தியதில் 7 பேர் படுகாயமடைந்ததையடுத்து தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.


இதில் படுகாயமடைந்தவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், இந்த தாக்குதலை மேற்கொண்ட குழு தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.


இதேவேளை, இந்த தாக்குதலை மேற்கொண்ட வாள்வெட்டுக் குழு அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிடத்திற்கு தீவைத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளதாகவும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


இவர்கள் தொடர்சியாக இந்த பிரதேசத்தில் இடம்பெறும் ஆலய உற்சவங்கள் விளையாட்டு போட்டிகள் போன்ற பொது நிகழ்வுகளில் மதுபோதையில் சென்று அராஜகத்தில் ஈடுபட்டு ஒலிவாங்கிகள் மற்றும் பொருட்களை அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்த வாள்வெட்டுக் குழுவின் தொடர்சியான அராஜகத்தினால் பாடசாலை சிறுவர்கள் தொடக்கம் மக்கள் அச்சத்தில் வாழ்ந்துவருவதாகவும் இவர்களுக்கு எதிராக பொலிசார் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காது அசமந்த போக்கில் இருந்து வருவதாகவும் பிரதேச புத்திஜீவிகள், பொது அமைப்புக்கள், ஆலய நிர்வாகங்கள் கடும் விசனங்களை முன்வைத்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »