Our Feeds


Wednesday, June 12, 2024

Anonymous

தேசிய வைத்தியசாலையில் 500 வைத்தியர்கள், 400 தாதியர்களுக்கு பற்றாக்குறை: 4000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

 



கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 500 வைத்தியர்களுக்கும் மற்றும் 400 தாதியர்களுக்கும் பற்றாக்குறை நிலவுவதாக வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 1700 வைத்தியர்கள் பணி புரிந்தாலும் மேலும் 500 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் 3300 தாதியர்கள் பணி புரிந்தாலும் மேலும் 400 பேருக்கு பற்றாக்குறை நிலவுவதாக பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.


தேசிய வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு, இருதய நோய்ப்பிரிவு, நரம்பியல் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு போன்றவற்றிற்கு வைத்தியர் பற்றாக்குறை அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.


கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கு நாளாந்தம் 2500 நோயாளர்கள் சிகிச்சை பெற வருகை தந்தாலும் குறித்த பிரிவில் 30 வைத்தியர்கள் மாத்திரமே உள்ளதாக ருக்ஷான் பெல்லன சுட்டிகாட்டியுள்ளார்.


ஒரு நோயாளரை பரிசோதனை செய்வதற்காக சாதாரணமாக 20 நிமிடங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை இருந்தாலும் கூட அவ்வாறு செயற்படின் ஆறு மணித்தியாலத்தினுள் வைத்தியர் ஒருவருக்கு 18 நோயாளர்களை மாத்திரமே பரிசோதிக்க முடியும் என அவர் எடுத்துக் காட்டினார்.


இலங்கைத்தீவில் 4000 வைத்தியர்களும் தேசிய வைத்தியசாலையின் 400 தாதியர்களும் 2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறியள்ளனர்.


பற்றாக்குறையாக உள்ள இடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யாமையினால் சுகாதாரத் துறையில் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் என்று தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »