Our Feeds


Thursday, June 20, 2024

SHAHNI RAMEES

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 35 பலி - 109 பேர் வைத்தியசாலையில்...

 

தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து  5 பெண்கள் உட்பட 35 உயிரிழந்துள்ளதோடு 109 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கனகு, மகன் கன்னுக்குட்டி கோவிந்தராஜ் (49), அவரது மனைவி விஜயா (42), கனகுவின் மற்றொரு மகன் தாமோதரன் (40) ஆகிய மூவரும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர்.

 

இவர்களிடம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை காலை பலர் கள்ளச்சாராயம் அருந்திவிட்டு மயங்கிய நிலையில், அவர்களுக்கு பார்வை மங்கியதுடன், நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இதேபோல, கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரி பகுதியிலும் கள்ளச்சாராயம் அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை 32 பேர் இறந்துள்ளதோடு. 70-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுவதாக தகவல் வெளியானது.

 

இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

 

கள்ளச்சாராயம் அருந்திய 42 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 19 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

இதேபோன்று விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

 

கள்ளச்சாராயம் அருந்திய 109 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 35 பேர் உயிரிழ்ந்துள்ளனர். அவர்களில் 5 பேர் பெண்கள். இறந்தவர்களில் உடல்கூராய்வு முடிந்த 7 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



துக்க நிகழ்விலும் கள்ளச்சாராயம்



கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் இறுதிச்சடங்கிற்கு சென்றவர்களும் கள்ளச்சாராயம் கொடுத்திருக்கிறார்கள். இதில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் உயிரிழந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. கள்ளச்சாராயத்தை கொடுத்தவர்கள் தலைமறைவாகிவிட்டனர் என்ற அதிர்ச்சி தகவலை கருணாபுரம் மக்கள் தெரிவித்தனர்.

 

சிபிசிஐடி விசாரணை தொடங்கியது



கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வினோத் சாந்தாராம் மேற்பார்வையில் கருணாபுரம் பகுதியில் சிபிசிஐடி பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

 

விசாரணை அதிகாரியும் கூடுதல் காவல் கண்காணிப்பாளருமான கோமதி, சென்னையில் இருந்து சென்ற டிஎஸ்பி சசிதரன் தலைமையிலான போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

 

பத்து பேரிடம் விசாரணை

 

கள்ளச்சாரயம் மரணம் தொடர்பாக இரு பெண்கள் உள்பட10 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே 200 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் 900 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »