Our Feeds


Tuesday, June 25, 2024

SHAHNI RAMEES

இலங்கையில் தங்கியிருந்து இணையத்தின் ஊடாக நிதி மோசடி - 30 வெளிநாட்டவர்கள் கைது.

 

நீர்கொழும்பில் 30 வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



இணையத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் நிதி கொடுக்கல் வாங்கல்களை நடத்தியதாக கூறப்படும் நிறுவனத்தில் பணியாற்றியவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.



குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று (24) இரவு இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.



இந்த நிலையில், கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் சீனா, பிலிப்பைன்ஸ், மாலைதீவு, பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளும் அடங்குவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக, இவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.



மேலும், 5000 ரூபாய் முதலீடு செய்தால் 3000 ரூபாய் இலாபம் கிடைக்கும் என்று கூறி அதிக அளவில் பணம் வசூலித்து இவர்கள் மோசடியில் ஈடுபட்டதாக அதிகாரி கூறியுள்ளார்.



சுற்றிவளைக்கப்பட்ட இரண்டு வீடுகளிலும் இருந்து பெருமளவிலான தொடர்பாடல் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.



இந்தநிலையில், குறித்த வெளிநாட்டவர்கள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவல்துறை பணிப்பாளர் சிரேஷ்ட அத்தியட்சகர் மங்களதெஹிதெனிய குறிப்பிட்டுள்ளார்.



அவர்கள் பலகோடி ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும், அவ்வாறான மற்றுமொரு இடத்தில் சோதனை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »